“12 வருடங்களுக்குப் பிறகு தமிழுக்கு வருகிறேன்” – நஸ்ரியா நெகிழ்ச்சி

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சீன்’. இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ பேனரில் தயாரித்துள்ளனர். நாயகியாக நஸ்ரியா நடித்துள்ளார்.  முக்கிய கதாபாத்திரத்தில் ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார். அதோடு ஆனந்த ராஜ் ஜான் விஜய், யூடியூபர் ராஜ் பிரியன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை சுஷின் ஷ்யாம் கவனித்துள்ளார்.

இப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்வு துபாயில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர். அந்த வகையில் நஸ்ரியா கலந்து கொண்டு பேசுகையில், “12 வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். என்னுடைய சினிமா பயணத்தில் நான் கடந்து வந்த மிகவும் அற்புதமான அனுபவங்களில் இப்படமும் ஒன்று. 

நவம்பர் 6-ஆம் தேதி இப்படத்தை தியேட்டருக்குச் சென்று பாருங்கள். படம் அடிப்பொலியாக இருக்கும். சிரித்து சிரித்து வயிறு வலிக்கும்” என்றார். தொடர்ந்து சூர்யா குறித்து பேசிய அவர், “நாங்கள் சினிமாக்களை தீவிரமாகப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே சூர்யா சாரின் ரசிகர்கள் தான். நாங்களும் இதுபோன்று தீவிரமாக சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதற்கு சூர்யா சாரும் ஒரு முக்கியக் காரணம். அவருடன் இணைந்து நடித்தது மிகவும் ஜாலியாக இருந்தது.  எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்” என்றார்.