நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரிக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்வி துறையில் நிலவும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி விவரித்தார். அவர், “கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒருவருக்கு கூட இதுவரை தண்டனைக்கு வழங்கப்படவில்லை. ஒரு குற்றப் பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. ஏன்? இதை அரசு கவனம் கொள்ளவில்லை. அப்படியானால் யாரோ? நமது கல்வித் துறையைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். இதற்கு ஆளும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
நமது இளைஞர்கள் இன்று இந்த தீவிரமாகப் போராடுவதற்கு இது தான் காரணம். அந்த தேர்வு அமைப்பு முறைகேடாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் சாதாரண மனிதர்களுக்கும் தெரிந்திருக்கிற விஷயம் தான். ஆனால், அது அரசுக்கு ஏன் தெரியவில்லை? ஒரு மாணவர் இந்த ஒரு தேர்வுக்காக ஒரு குடும்பம் செய்யும் செலவு என்பது, ஒருவரின் முழு கல்விக்கும் செலவிடப்படும் நிதிக்கு இணையானது.
அரசு மொத்த வரிகளையும் வசூலித்த பிறகு நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பணத்தைச் செலவழிக்கிறது. அந்த பணம் கல்வி நிதி ஒதுக்கீடு எனப்படுகிறது. இதன் மதிப்பு 1.4 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று கல்விக்காகப் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் 1.32 லட்சம் கோடி நிதி நீட் தேர்விற்காக மட்டுமே செலவிடப்படுகிறது.
இந்த ஒட்டு மொத்த பணமும் (1.32 லட்சம் கோடி) அந்தந்த குடும்பங்களில் இருந்து திருடப்படுகிறது. இந்த பணத்தை குடும்பங்களில் இருந்து திருடிய பின்பு வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக அதிகாரத்தில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். இதனைச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் சொல்கிறார்கள்.
அதே போல, இளைஞர்கள் போராடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அவர்கள் படித்து முடித்த பிறகு இந்த நாடும், அரசாங்கமும் அவர்களுக்கு வாழ்வாதாரத்தையும், வேலையையும் வழங்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறு வழங்கப்படவில்லை. நாட்டில் உள்ள உற்பத்தித் துறைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சாதாரணமாக உங்களைச் சுற்றிப் பாருங்கள். சீனா பொருட்கள் மட்டுமே உள்ளன. இங்குத் தொழில் துறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இரண்டு மூன்று பெரிய நிறுவனங்கள் மட்டுமே வங்கிகளில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்கின்றன. அதனால், இளைஞர்களுக்குத் தொழில் தொடங்க வங்கிகளில் பணம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், பெரு நிறுவன பணிகளைச் செயற்கை தொழில்நுட்பங்கள் அழித்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே, தகவல் தொழில்நுட்ப துறையும், பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன.
எனவே, இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அரசு வேலை தான். அந்த வேலையையும் விலையுயர்ந்தாக மாற்றியுள்ளார்கள். படித்துவிட்டு வேலை இல்லாமல் அவர்கள் வெளியே சும்மா இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? எந்த செயலுக்கும் அதற்கான விளைவுகள் இருக்கும். இந்த போராட்டம் இளைஞர்களின் தவறு அல்ல. கல்வித்துறையில் தோல்வியடைந்த, ஊழல்வாதியான தர்மேந்திர பிரதான், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது இளைஞர்களின் நியாயமான கோரிக்கை. தங்களால் கல்வித்துறையை நிர்வகிக்க முடியாது என்பதை அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது. எனவே, இந்த நிர்வாக சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இளைஞர்களின் எதிர்காலம் காக்கப்பட வேண்டும்” என்று பேசினார்.
