16 நாட்களாகப் போராடும் தூய்மைப் பணியாளர்கள்; பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர்கள்!

தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு, கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகள், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் 15 நாட்களுக்கு மேலாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் 150 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த அந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள சூழலில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி 15 நாட்களுக்கு மேலாக சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில்போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக முற்றுகை போராட்டங்கள், அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றி தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்தார். இருப்பினும் அவர்களின் முக்கிய கோரிக்கையான தினக்கூலி உயர்வு, ஒப்பந்தமுறையில் பணி புரியும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வார விடுப்பு, பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரை நேரில் சந்தித்து வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்களான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது முந்தைய அரசுகள் கஜானாவை காலியாக்கிவிட்டதாகவும், இருப்பினும் கலந்து பேசி உங்களது கோரிக்கை படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர்கள் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

Source link