புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த 101 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை 17 மாநிலங்களில் இருந்து போலீசார் மீட்டு, அவர்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளை கண்டுபிடித்து மீட்டு பாதுகாப்பாக சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும் வகையில், ஒடிசா போலீசாரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் ‘ஆபரேஷன் அன்வேஷன்’ என்ற சிறப்பு நடவடிக்கை கடந்த 2 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டது.
17 மாநிலங்களில்
இதற்காக 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவுக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலான அதிகாரி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி தலைமையேற்றனர். இந்த குழுக்கள் சுமார் 10 முதல் 12 நாட்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தங்கி, அங்குள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டன.சத்தீஸ்கார், மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், அசாம், பீகார், ஜார்கண்ட், அரியானா, உத்தரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம், குஜராத் மற்றும் கேரளா ஆகிய 17 மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடத்தல் வழக்கு
மீட்கப்பட்ட குழந்தைகளில் சிலர் கடத்தி சென்றவர்கள், சிலர் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்ததும், சிலர் குழந்தைகள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 9 சிறுமிகள், 2 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களாக இருந்த 6 சிறுவர்கள், ஒரு சிறுமி மீட்கப்பட்டனர். குழந்தைகள் காப்பகங்களில் இருந்து 46 சிறுவர்கள், 37 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் 3 மாத குழந்தையும் அடங்கும். மற்றொரு மாநிலத்தில் தங்கியிருந்த ஒடிசாவைச் சேர்ந்த சிறுமிக்கு அந்த குழந்தை பிறந்துள்ளது. அந்த சிறுமியையும் குழந்தையையும் ஒடிசாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஒரு வயது குழந்தையின் தாயை போலீசார் கண்டுபிடித்து, குழந்தையை தாயுடன் சேர்த்து வைத்தனர். குழந்தைகள் கடத்தல், சுரண்டல் மற்றும் குழந்தை தொழிலாளர் முறையில் இருந்து அவர்களை பாதுகாப்பதுடன், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று ஒடிசா போலீசார் தெரிவித்தனர்.
