“170 ஆவணங்கள் பறிமுதல்” – லஞ்ச ஒழிப்புத் துறை தகவல்!

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் அவருடைய அலுவலகம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (29-10-26) காலை முதல் சோதனை நடத்தினர். அதே போல், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்கள், திமுக முன்னாள் எம்எல்ஏக்களான அணைக்கட்டு நந்தகுமார், நாமக்கல் ராமலிங்கம் மற்றும் திருச்சி, துறையூர் திமுக நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி ஆகியோர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். 

இந்நிலையில் கே.என்.நேரு வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பிரிவுகளில் 2538 விண்ணப்பதாரர்களைப் பணி நியமனம் செய்ததில் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்ததாகச் சென்னை அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை, முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என். நேரு மற்றும் 7 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது. 

தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டு, அவர்கள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் , சுகாதார ஆய்வாளர், வரைவாளர்  போன்ற பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணம் 2024-25 ஆம் ஆண்டில் ஹவாலா நெட்வொர்க் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று (29.10.2026) சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட 25 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின் போது, வழக்கின் விசாரணைக்குத் தொடர்புடைய 170 குற்றஞ்சார்ந்த ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு சாதனங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.