2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்; அ.தி.மு.க-வில் யாருக்கு வாய்ப்பு? வெளியான பட்டியல்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, 
அ.தி.மு.க.வில் இருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர். ஏற்கனவே திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியும் சேர்த்து தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

மின்சாரக் கொள்முதல், நிலக்கரி நிர்வாகக் குளறுபடி; டான்ஜெட்கோவிற்கு ரூ.9,500 கோடி இழப்பு: சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல்

இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக தடை விதித்திருந்த நிலையில், தற்போது 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, அ.தி.மு.க உறுப்பினர் மரகதம் குமாரவேல் ராஜினாமா செய்த மதுராந்தகம், அ.தி.மு.க. உறுப்பினர் சத்யபாமா ராஜினாமா செய்த தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் தாராபுரம் தொகுதியில் தி.மு.க 2-வது இடமும், த.வெ.க 3-வது இடமும் பெற்றிருந்த நிலையில், மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க 2-வது இடம் பிடித்திருந்தனர். இதனிடையே தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கும், வரும் அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க உட்பட ஒவ்வொரு கட்சியிலும் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியை பொருத்தவரை முன்னாள் எம்.எல்.ஏ கணிதா சம்பத் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

இவர் ஏற்கனவே திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001-ஆம் ஆண்டு மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக இருந்தார். அதே சமயம் அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் விவேக் என்கிற விவேகானந்தன் என்பவருடைய பெயரும் அடிபடுகிறது. அவரும் கடந்த முறை மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

தாராபுரம் தொகுதியை பொறுத்தவரை வழக்கறிஞர் அபிராமி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் ராஜா வின்சென்ட் என்பவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பி.மகேஷ் குமார் என்பவரும் தனக்கு வாய்ப்பு தரும்படி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தாராபுரம் தொகுதியில் மகேஷ் வாய்ப்பு கேட்டதாகவும் அவருக்கு பதிலாக தான் சத்யபாமாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மகேஷ் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link