சென்னை: ”இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றி, த.வெ.க., ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்க வேண்டும்,” என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார்.
சென்னை வேளச்சேரி பகுதி தி.மு.க., நிர்வாகியின் திருமணம், உதயநிதி தலைமையில் நேற்று நடந்தது.
திருமண விழாவில் உதயநிதி பேசியதாவது:
தி.மு.க., எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும் பார்த்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், சிறப்பான எதிர்க்கட்சியாக மக்களோடு நின்று செயல்படுகிறோம்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், மின்வெட்டு. சட்டம் – ஒழுங்கு நிலைமை பற்றி, நான் சொல்லத் தேவையில்லை.
இந்த ஆட்சியில் அரிசி, பருப்பு என, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் , அவற்றின் பற்றாக்குறையும் ஏறிக்கொண்டே இருக்கின்றன.
இது குறித்து கேள்வி கேட்டால், முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லை.
அடுத்த கட்சியின் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்கி, ஆட்சி அமைத்ததால், இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது.
இடைத்தேர்தலில் தி.மு.க.,வின் வெற்றி, இந்த ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக இருக்க வேண்டும்.
அதற்கு, தி.மு.க.,வினர் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இடைத்தேர்தலில், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
