20 அமைச்சர்களின் பணிகள்: பிரதமர் மோடி ஆய்வு

புதுடில்லி: மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் என 20 பேரின் பணிகள் குறித்து நேற்று ( செப்.,07) பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

விவசாயம்,ஊரக வளர்ச்சி, கல்வி மற்றும் சமூக நீதி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் மாலை 5 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நீடித்தது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள், செயலாக்கம், எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நிர்வாக சீர்திருத்தம், தற்போது செயல்படுத்தி வரும் மக்கள் நல திட்டங்கள், தங்கள் துறைகளில் அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் குறித்து அமைச்சரகள் விளக்கம் அளித்தனர்.

2047 ல் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கொள்கைக்கு தேவையான செயல்படுத்தக்கூடிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை அளிக்கும்படி கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, நவீன கால தொலைத்தொடர்பு கருவிகளை பயன்படுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார். பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்துவதுடன், அதன் வாயிலாக அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்து வரும் நாட்களில் இதுபோன்ற கூட்டங்களை மேலும் நடத்தவும் பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.

Source link