லண்டன் 200 ஆண்டுகள் பழமையான பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று பெருமை சேர்த்த தனது இளைய மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பா.ஜ.க. பிரமுகர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை முன்னாள் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ், லண்டனில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் முதுகலைச் சட்டப் படிப்பில் (Master of Laws) சிறப்பிடம் (Distinction) பெற்றுப் பட்டம் வென்று உள்ளார்.
வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ், தனது இளங்கலைச் சட்டப் படிப்பை (Undergraduate Degree in Law) இந்தியாவின் முன்னணி நிறுவனமான O.P. ஜின்டால் உலகளாவிய பல்கலைக் கழகத்தில் (O.P. Jindal Global University) பயின்று சிறப்பிடம் (Distinction) பெற்றுத் தேர்ச்சி அடைந்து இருந்தார். அதனைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற மற்றும் 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ‘லண்டன் யூனிவர்சிட்டி காலேஜில்’ (University College London – UCL) சட்டத்துறையில் முதுகலைப் படிப்பில் இணைந்து தீவிரமாகப் பயின்று வந்தார்.
இந்நிலையில், கைலாஷ் தனது முதுகலைச் சட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, அதில் உயரிய ‘டிஸ்டிங்ஷன்’ (Distinction) தரவரிசையுடன் பட்டம் பெற்று உள்ளார். இதற்காகத் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு நேரில் சென்ற வானதி சீனிவாசன், தனது மகன் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற தருணத்தைப் பெருமையுடன் கண்டு களித்தார். தனது இளைய மகன் பட்டம் வாங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சமூக வலைதள பக்கங்களான எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக்கில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பகிர்ந்து உள்ள வானதி சீனிவாசன், தனது மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
மகனின் இந்த உயரிய சாதனைக்காகப் பா.ஜ.க நிர்வாகிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கோவை பொதுமக்கள் பலரும் வானதி சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
