மத்திய கிழக்குப் பசிபிக் பெருங்கடலில் தீவிரமடைந்து வரும் “மிகவும் வலுவான” எல் நினோ காரணியானது, வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய அளவில் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு அமைப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் எனக் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன
வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் செலஸ்டி சவ்லோ கூறுகையில்,
”எல் நினோ உறுதியாக உருவாகிவிட்டது. அது மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் பொருளாதாரங்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும் வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்கனவே பல்வேறு நாடுகள் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், எல் நினோ தீவிரமடைவதால் இந்தத் தாக்கங்கள் மேலும் அதிகரிக்கும்.
உலக வானிலை அமைப்பின் 50 ஆண்டுகால வரலாற்றில், முன்னறிவிப்புகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கி மனித உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தேசிய வானிலை மற்றும் நீரியல் சேவைகளுடன் (NMHS) இணைந்து இந்த அளவுக்குப் பெரிய அளவிலான கூட்டமைப்பை நாங்கள் திரட்டியதே இல்லை” என்று தெரிவித்தார்.
எல் நினோ என்பது பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் இயல்புக்கு மாறாக அதிக வெப்பமடைவதால் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வாகும். இது உலகளவில் தீவிர வெப்ப அலைகள், கனமழை மற்றும் தட்பவெப்பநிலை மாறுபாடுகளைத் தூண்டுகிறது. பசிபிக் பெருங்கடலின் நினோ 3.4 (Nino 3.4) பகுதியில் மூன்று மாத சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு இதன் வீரியம் கணக்கிடப்படுகிறது.
கடந்த மே முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்த வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்பட்டது. ஜூலை மாதத்தில் இது மேலும் அதிகரித்து, 2 டிகிரி செல்சியஸைக் கடந்து அதிவேகமாகத் தீவிரமடைந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு மிகக் கடுமையான கோடைகாலம் பதிவாகியுள்ளதுடன், ஆகஸ்ட் மாதத்தில் உலகின் பல இடங்களில் வரலாறு காணாத வெப்பநிலை நிலவியுள்ளது.
இதனால், தற்போதைய எல் நினோ நிகழ்வு மேலும் தீவிரமடைந்தால் என்ன நடக்கும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
வறட்சி, வெள்ளம், அதிக வெப்பநிலை உள்ளிட்ட தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள நாடுகள் முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று உலக வானிலை அமைப்பு (WMO) வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் எல் நினோவின் தாக்கம்
இந்திய வானிலை மையத்தின் (IMD) கூற்றுப்படி, ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழை எல் நினோவின் நிழலில் வீழ்ந்தாலும், பருவமழையின் முக்கால்வாசி காலம் நிறைவடைந்துவிட்டதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இன்றி தப்பியுள்ளது.
அதேவேளையில், எல் நினோவுக்கு நிகரான இந்தியப் பெருங்கடல் காரணியான ‘இந்திய பெருங்கடல் இருமுனை’ (Indian Ocean Dipole – IOD) செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் நேர்மறை நிலையை (Positive Phase) அடைய வாய்ப்புள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நேர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை காரணியானது எல் நினோவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழைக்குப் பிந்தைய குளிர்கால முன்னறிவிப்பை இந்திய வானிலை மையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், தீவிரமடைந்து வரும் இந்த எல் நினோ காரணியால் வரவிருக்கும் குளிர்காலத்தில் வழக்கமான கடுங்குளிர் குறைய வாய்ப்புள்ளதாகப் பருவநிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
