2029ம் ஆண்டுக்குள் பொதுசிவில் சட்டம் அமல்: அமித்ஷா திட்டவட்டம்

மும்பை: நாடு முழுவதும் 2029ம் ஆண்டுக்குள், 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு முக்கிய சட்டங்கள் மற்றும் பாதுகாப்பில் சாதனை படைத்துள்ளது.

அதன்படி, எதிர்கால கொள்கையின் முக்கிய இலக்காக, 2029-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, பாஜ மற்றும் என்.டி.ஏ கூட்டணியில் உள்ள 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமலாகும்.

உத்தரகாண்ட் மாநிலம் ஏற்கனவே இதை ஒரு மாதிரி சட்டமாக வெற்றிகரமாக இயற்றியுள்ளது என்றும், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இதற்காக ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளன .

பொது சிவில் சட்டம் பழங்குடியின மக்களின் உரிமைகளையோ அல்லது கலாசார மரபுகளையோ பாதிக்காது.

உத்தரகாண்ட் மாநில சட்டத்தில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள சிறப்புப் பாதுகாப்புகளைப் போலவே, இந்த சட்டத்தின் விதிகளிலிருந்து பழங்குடியின சமூகத்தினருக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி அளிக்கும்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டவிரோத ஊடுருவல்காரரையும் கண்டறிந்து, கண்காணித்து, நாட்டை விட்டு வெளியேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாக்கத்திற்கு 1951-ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாக பயன்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, இறுதி முடிவை அறிவிக்கும் முன் மத்திய அரசு தனது அரசியல் கூட்டணிக் கட்சிகள் மற்றும் உள்ளூர் கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

கடந்த 50 ஆண்டுகளாக இருந்த நக்சல்கள் அச்சுறுத்தல்களை மத்திய அரசு வெற்றிகரமாக முறியடித்துள்ளது , வடகிழக்கு மாநிலங்களில் 14-க்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டு, 9,000-க்கும் மேற்பட்ட முன்னாள் பயங்கரவாத அமைப்பினரை சேர்ந்தவர்கள் சரண்டர் ஆகி உள்ளனர் அவர்களின் வாழ்வாதாரம் மாற்றியமைக்கப்பட்டது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Source link