நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டின் மிகப்பெரிய தேசியப் போராட்டமாகக் குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2029ஆம் ஆண்டுக்குள் “போதைப்பொருள் இல்லாத இந்தியா” என்ற இலக்கை அடையும் நோக்கில், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான மூன்று ஆண்டு செயல்திட்டத்தையும் தொலைநோக்குப் பார்வை ஆவணத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
கோவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித் ஷா கூறியதாவது:
2029ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றும் இலக்கை அடைவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளோம். போதைப்பொருள் கடத்தல் என்பது எதிர்காலத் தலைமுறைகளையே சீரழிக்கும் குற்றமாகும். இதன் மூலம் புழக்கத்திற்கு வரும் ‘கறுப்புப் பணம்’ பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் போதைப்பொருள் சார்ந்த பயங்கரவாதக் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்தப் பிரச்சினையால் ஒட்டுமொத்த உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு முதல், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் மூலம் போதைப்பொருள் வலையமைப்புகள் முறியடிக்கப்பட்டதுடன், அவற்றின் நிதிச் சங்கிலிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் “சிறு சிறு பகுதிகளாகவும்”, “தனித்தனி அமைப்புகளின் வரம்புக்குள்ளும்” மேற்கொள்ளப்பட்டது. அவை சிறிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு, போதைப்பொருள் ஒழிப்பை தேசியப் பாதுகாப்புக்கான முக்கிய முன்னுரிமைப் பிரச்சினையாக மாற்றினோம். நான்கு அடுக்கு எக்.சி.ஒ.ஆர்.டி (NCORD (Narcotics Coordination Centre- போதைப்பொருள் ஒருங்கிணைப்பு மையம்) அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தனிப்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பணிக்குழுக்களை அமைத்து, உள்ளூர் காவல்துறையை தேசிய அளவிலான உத்தியில் ஒருங்கிணைத்தோம்.
போதைப்பொருளைப் பறிமுதல் செய்வதை மட்டுமே மையமாகக் கொண்ட நடவடிக்கையை, போதைப்பொருள் வலையமைப்புகளைக் குறிவைக்கும் அமலாக்க நடவடிக்கையாக மாற்றினோம். கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கும், மேல்மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திற்கும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் முக்கியக் குற்றவாளிகள், அவர்களது கூட்டாளிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் சப்ளையர்கள் வரை சென்றடைந்தோம்.
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக மேற்கொள்ளும் கோப்புப் பணிகள் மற்றும் அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ற நிலையிலிருந்து, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான தேசியப் பிரசாரமாக பாஜக அரசு மாற்றியுள்ளதாகவும் அமித் ஷா கூறினார்.
‘பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவில் முன்னெப்போதும் இல்லாத அதிகரிப்பு’
2014ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 26 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் மற்றும் மனநிலையை மாற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், 2014 முதல் 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில், 1.19 கோடி கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் மனநிலையை மாற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,
நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டமே நாட்டின் மிகப்பெரிய தேசியப் போராட்டமாகும். 2026 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை இலக்கு சார்ந்த தீவிர செயல்பாட்டு காலமாக மாற்றுவோம். ஒவ்வொரு இலக்குக்கும் ஒரு காலக்கெடு, பொறுப்பான அமைச்சகம், அளவிடக்கூடிய முடிவுகள், காலாண்டு மதிப்பாய்வுகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையிலான பொறுப்புணர்வு ஆகியவை இருக்கும்.
இந்த உத்தியின் மூன்று முக்கிய விளைவுகள் — போதைப்பொருள் விநியோகத்தைக் குறைத்தல், போதைப்பொருள் தேவைப்பாட்டைக் குறைத்தல் மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல்” என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த இலக்கை அடைவதற்காக ‘நான்கு தூண்கள்’ அடிப்படையிலான செயல்திட்ட தொலைநோக்குப் பார்வை ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா கூறினார்.
அந்த நான்கு தூண்கள்:
உளவுத்தகவல் மற்றும் நடவடிக்கை அடிப்படையிலான அமலாக்கம்
போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முன்னோடி வேதிப்பொருட்கள் மற்றும் செயற்கை போதைப்பொருட்களின் கட்டுப்பாடு
போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல்
திறன் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு
செய்தியாளர் சந்திப்பு பிற்பகலில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கோவாவில் பா.ஜ.க.வின் புதிய மாநிலத் தலைமையகத்தைத் திறந்து வைப்பதற்காக அமித் ஷா பனாஜி அருகே உள்ள சிம்பெல் பகுதிக்குச் சென்றார். எனினும், டெல்லியில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுச் சம்பவம் காரணமாக அந்த நிகழ்ச்சி குறைக்கப்பட்டதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். டெல்லியில் ஒரு துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளதால், நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று சாவந்த் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
