2036-க்குள் தமிழ்நாடு 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்: அமைச்சர் மதன்ராஜா உறுதி

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி நடத்திய ‘இன்னோவெஸ்ட் 3.0’ (INNOVEST 3.0) நிறைவு விழாவில் பங்கேற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஸ்டார்ட்அப் மற்றும் எம்.எஸ்.எம்.ஈ. (MSME) துறைகளை ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், புத்தாக்க நிறுவனங்களுக்கான அரசின் நிதியுதவி ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் (எம்.எஸ்.எம்.இ) 30 சதவீதப் பங்காற்றி வருகின்றன. மேலும், இத்துறைகள் 2.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ‘INNOVEST 3.0’ நிறைவு விழாவில் பேசினார். சென்னை தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பி.ஸ்ரீராம் வரவேற்புரை ஆற்றினார் .

இன்று (03/09/2026) சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே செயல்பட்டு வரும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் மூன்றாவது ‘இன்னோவெஸ்ட் 3.0’ (INNOVEST 3.0) நிகழ்வு, செப்டம்பர் 1, 2026 அன்று சி.ஐ.டி கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கில் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வு, சி.ஐ.டி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், அதிநவீனத் தொழில்நுட்பத் தொழில்முனைவோர்களையும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்பட்டது. ஸ்டார்ட்அப் நிகழ்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகளைப் பாராட்டி, அமைச்சர் சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் மதன் ராஜா தெரிவித்ததாவது: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்டார்ட்அப் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. மாநிலத்தில் சுமார் 4.1 மில்லியன் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ) பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 30 சதவீதம் பங்களிப்பதுடன், 2.5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றன.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், ஸ்டார்ட்அப் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் நிதியுதவி ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, செமிகண்டக்டர் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் பாராட்டினார்.

இந்த நிகழ்வில், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வழிகாட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர். ஆய்வின் முக்கிய வழித்தடங்களான பிரச்சினையைக் கண்டறிதல், தீர்வை உருவாக்குதல் மற்றும் அதனை சமூகத்திற்குப் பயனளிக்கும் திட்டமாக மாற்றுதல் ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு, இந்நிகழ்விற்கு இன்னோவெஸ்ட் 3.0 ‘ஆய்வு – காட்சிப்படுத்துதல் – செயல்படுத்துதல்’ என்ற தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது.

புத்தாக்கப் படைப்புகளின் காட்சிப்படுத்தல், விவாத நிகழ்வுகள், ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலீட்டாளர்களை ஈர்ப்பதுடன், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே நேரடித் தொடர்பு, கூட்டுத் தொழில் மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், இக்கல்லூரி மாணவர்கள் தங்களின் சொந்தக் கண்டுபிடிப்புகளை முதலீட்டாளர்கள், வல்லுநர்கள் மற்றும் நிதி ஆயோக் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் காட்சிப்படுத்தி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். மேலும், செமிகண்டக்டர் துறையில் முன்னோடியாக விளங்கும் தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொழில்துறையின் முன்னணி தலைவர்கள், வல்லுநர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகளின் விரிவுரைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், வல்லுநர்கள் தங்களின் நேரடி அனுபவங்களைத் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் தொழில்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் இன்னொவெஸ்ட் 3.0 நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில், இந்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஸ்டார்ட்அப் ஹப் தலைமைச் செயல் அதிகாரி பி. பன்னீர்செல்வம், இந்திய அரசின் நிதி ஆயோக் – அடல் புத்தாக்க இயக்கத்தின் (ஏ.ஐ.எம்) திட்ட முன்னணி ஹிமான்ஷு ஜோஷி, யூனிகார்ன் இன்குபேட்டர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகக் கூட்டாளர் மஹிமா ஜினா கிம், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனத்தின் உதைத் தலைவர் சி.என். பிரேம்குமார், தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு திட்ட முன்னணி பூங்கோதை மதியழகன், சி.ஐ.டி புத்தாக்க இயக்குநர் கோகுலகிருஷ்ணன் ஸ்ரீராம், ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ் பேங்க் (DFC First Bank)-ன் ஸ்டார்ட்அப் வங்கிச் சேவை நிர்வாகக் கூட்டாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், ஸ்டார்ட்அப் தமிழ்நாடு மற்றும் இ.டி.ஐ.ஐ-டி.என் (EDII-TN) அமைப்புகளின் அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் வழிகாட்டுநர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link