“241 ஆவணங்கள் பறிமுதல்” – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

தமிழகத்தில் 10க்கும் அதிகமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (05.09.2026) சோதனை மேற்கொண்டனர். அதிலும் குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்றன. அதாவது திருச்சி தில்லை நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்கள், சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் இடங்கள் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

அதோடு ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனையானது நடைபெற்றது. அதே போன்று கோவை சிங்காநல்லூரில் உள்ள கே.என். நேருவின் மற்றொரு சகோதரர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு டெண்டர்களில் (ஒப்பந்தப்புள்ளிகளில்) முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இன்று  (05.09.2026) அன்று சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள 30 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது, டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 241 குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணைப் பிரிவில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link