3 முதல்வர்களுக்கு ஆலோசகர்; படிப்புக்கு தடை போட்ட அப்பா, அரசியலுக்கு கிரீன் சிக்னல்: அமைச்சர் கீர்த்தனா பேச்சு

மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி ஆகியோரிடம் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றிய அனுபவம்தான் அரசியலில் கால் பதிக்கத் தைரியம் தந்தது என்று அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் புதிய கட்சியாக த.வெ.க 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த ஆட்சி 5 மாதங்களை கடந்துள்ளது. இந்த சட்டசபை தேர்தலில், த.வெ.க சார்பில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் கீர்த்தனா. 

த.வெ.க ஆட்சியில் தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கும் இவர், தனது தொகுதியான சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் என்ட்ரி ஆக தனக்கு தைரியம் வந்தது எப்படி என்பது குறித்து பேசியுள்ளார். 

இதில், பேசிய அவர், நான் கல்லூரி முடித்தவுடன் கல்யாணம் என்ற நிலைமை வந்து என்னையும் பெண் பார்க்க வந்தார்கள். அப்போது அவர்கள் முன்பே நான் லண்டன் சென்று படிக்க போகிறேன் என்று சொன்னேன். அப்போது என் அப்பா இதற்கு தடையாக இருந்தார். உன்னை யார் லண்டனில் படிக்க வைக்கப்போகிறார் என்று கேட்டார். ஒரு பெண் இந்த சமூகத்தில் எப்படி வளர முடியும் என்று அவர்களுக்கு பயம். 

எந்த வித வசதியான பின்புலத்தில் இருந்து நான் வரவில்லை. பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நினைத்தார்கள். அதனால் அவர் என் படிப்புக்கு தடையாக இருந்தார். ஆனால் அன்றைக்கு நான் எனது அப்பாவை சமாதானம் செய்து, கண்டிப்பாக இந்த சமூகத்தில் நான் முன்னேறுவேன் என்று சொல்லி தைரியம் கொடுத்தேன். அதன்பிறகு நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொன்னபோது எங்க அப்பாவே எனக்காக போஸ்டர் ஒட்டினார். 

அன்றைக்கு தடையாக இருந்த என் அப்பா இப்போது என் முன்னேற்றத்திற்கு கூட நிற்கிறார். அந்த தைரியத்தை நம்மதான் கொடுக்க வேண்டும். பெற்றோர்களுக்கு ஒருவித பயம் இருக்கும். அவர்கள் வந்த காலமும் அப்படி இருந்தது. ஆனால் உங்களால் சாதிக்க முடியும் என்று நிரூபித்தால் தான் இந்த சுழற்சியில் இருந்து நாம் வெளியில் வர முடியும். இங்கிருக்கும் அனைவரும் என்னை போன்ற ஒரு அமைச்சராக மட்டும் இல்லாமல் பிரதமராக கூட ஆக முடியும் என்று கூறியுள்ளார். 

தான் அரசியலுக்கு என்ட்ரி ஆனது குறித்து பேசிய கீர்த்தனா, நான் படித்து முடித்தவுடன் டேட்டா அனலைஸ்க்கு 30 ஆயிரம், சமூக சேவைக்கு 9600 சம்பளம் என்று சொன்னார்கள். நான் சமூக சேவையை தேர்வு செய்தேன். பெண்கள் என்னைப்போல் பின்னடைவை சந்திக்க கூடாது என்பதால் அதை தேர்வு செய்தேன். அதன்படி மகாராஷ்டிராவில் ஒரு அரசுப்பள்ளியை முன்னேற்ற நான் வேலை செய்தேன். அங்கிருந்து தான் என் அரசியல் பயணம் தொடங்கியது. 

அரசியல் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள, அரசியல் ஆலோசகராக போனேன். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி, ஆகியோருடன் வேலை பார்க்கும்போது தான், நாமும் இந்த அரசியலில் சாதிக்க முடியும் என்ற தைரியம் வந்தது. சமூக செய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணம் இருந்ததால், அரசியலில் கால் பதித்தேன். அரசியலில் பண பலம் இருந்தால் மட்டும் தான் முன்னேற முடியும் என்று சொல்வார்கள்.

நான் அவ்வாறு நினைக்கவில்லை. 8 ஆண்டுகள் அரசியல் ஆலோசகராக இருந்தபோது, சேர்த்து வைத்த பணத்தை போட்டு தொடங்கினேன். வேலையை விட்டுவிட்டு அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். மக்களை நம்பி ஆரம்பித்தேன். மக்கள் என்னை கைவிடவில்லை. ஆனால் இன்றைக்கு நான் இங்கு இருப்பதற்கு முக்கிய காரணம் த.வெ.க என்ற கட்சியும், விஜய் என்ற முகமும் தான் என்று கீர்த்தனா கூறியுள்ளார்.  

Source link