3 லட்சத்தை தாண்டிய தினசரி பயணிகள்: 28 புதிய ரயில்கள் வாங்க சென்னை மெட்ரோ முடிவு

சென்னையில் முதல் கட்டமாக இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. தொடக்கக் காலத்தில் நாள் ஒன்றுக்கு 10,000, 15,000, 50,000 என இருந்த பயணிகளின் எண்ணிக்கை, தற்போது 3 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.

கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, பணிக்குச் செல்வோர் அதிக அளவில் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன், சென்னை விமான நிலையத்திற்கு எளிதில் செல்ல முடிவதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் பயன்பாடும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, கடந்த மாதத்தில் மட்டும் 1 கோடியே 4 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மெட்ரோவில் தற்போது மொத்தம் 45 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், காலை மற்றும் மாலை போன்ற அதிக நெரிசல் மிகுந்த நேரங்களில் 45 ரயில்களும் முழுமையாக இயக்கப்படுகின்றன. நெரிசல் இல்லாத மற்ற நேரங்களில் 30 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. நாள்தோறும் அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்தச் சேவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை பெருநகரத்தில் நெரிசலற்ற விரைவுப் பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்து வருகிறது. மேலும், பயணிகளுக்கு எளிதான இணைப்பு போக்குவரத்து வசதிகள் உள்ளதால் மெட்ரோ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் நிலவும் கடுமையான கூட்ட நெரிசலைக் கையாள கூடுதல் ரயில்களை இயக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கூடுதலாக 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும் என்பதால், மொத்தம் 168 புதிய மெட்ரோ ரயில் பெட்டிகளை வாங்குவதற்கு தற்போது டெண்டர் கோரப்படுகிறது. இந்த புதிய ரயில் பெட்டிகள் வாங்கப்பட்டு விரைவிலேயே பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன. அதற்கான பூர்வாங்கப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கூடுதல் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், தற்போது நிலவி வரும் கூட்ட நெரிசல் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link