“5 ஆண்டுகளும் கம்யூனிஸ்டுகள் ஆதரவு அளிப்பார்கள்” தவெக அமைச்சர் நிர்மல் குமார் நம்பிக்கை! – tvk minister nirmal kumar confident of communist support continuing for five years

இரண்டு தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய பதிலுரை தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சட்டம் ஒழுங்கு குறித்து எழுப்பிய கேள்விக்கு காவல்துறை மீதான விவாதத்தில் பதிலளித்த முதல்வர் விஜய், திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி காரசாரமான உரையை நிகழ்த்தினார்.

குறிப்பாக, திமுகவின் கடந்த கால ஆட்சி, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி முதல்வர் பேசியது அரசியல் ரீதியாக கவனம் பெற்றது. அதே நேரத்தில், அவரது உரையில் இடம்பெற்ற சில கருத்துகள் சர்ச்சையையும் ஏற்படுத்தின.

தவெக கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பில்லை

இந்தச் சூழலில், இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்துக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிக்க விரும்புவதாகவும், கூட்டணியில் இணையப்போவதில்லை என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன. இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக தரப்பில் இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

“தேர்தல் நேரத்தில்தான் தொகுதி பங்கீடு”

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமாரிடம், தவெக ஆதரவுகட்சிகளின் கூட்டத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், இதுதொடர்பாக ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சியில் இருக்கும் ஐந்து ஆண்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு தொடரும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது கொள்கை மற்றும் நிலைப்பாட்டை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை என்றும், மக்களுக்கான அரசாக இந்த அரசு செயல்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

“மிசா குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன”

இதனிடையே, மிசா காலகட்டம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் படிக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்திருந்தது குறித்தும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நிர்மல் குமார், மிசா காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சட்டப்பேரவையிலேயே பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

திமுகவிற்கு உருவான அரசியல் நெருக்கடி! தவெகவுடன் கூட்டணி வைக்க துடிக்கும் கட்சிகள்!

மேலும், இஸ்மாயில் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களில் மிசா காலத்தில் சிறையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சிட்டிபாபுவின் மரணம் தொடர்பான விவகாரத்திலும் ஸ்டாலின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“கடந்த காலத்தை இளைஞர்கள் அறிய வேண்டும்”

திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தவறுகள் மற்றும் தமிழர்களுக்கு அந்தக் கட்சி செய்ததாக கூறப்படும் துரோகங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, தமிழகத்தை அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதே முதல்வர் விஜய்யின் நோக்கம் என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த கால அரசியல் மற்றும் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே முதல்வர் சட்டப்பேரவையில் அவ்வாறு விரிவாக உரையாற்றியதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஒருபுறம் திமுக – தவெக இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இணையாமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பது, தவெகவின் அடுத்தகட்ட அரசியல் வியூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Source link