சீனாவில் பேத்தியை வளர்த்ததற்கு ரூ.45 லட்சம் இழப்பீடு கோரி மூதாட்டி ஒருவர் சொந்த மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
ஷாங்காய் நகரைச் சேர்ந்தவர் சு (60). இவர் தனது மகன் லியாங் உடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு லியாங் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அப்போது, அவரது 4 வயது மகளை கவனித்துக்கொள்ளாமல் வேலை நிமித்தமாக வெளியில் சென்றுவிட்டார். இதையடுத்து, அவரது மகள் தனது பாட்டி சுவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இந்த சூழலில், லியாங் சமீபத்தில் மறுமணம் செய்து கொண்டார். பின்பு, தனது மனைவியுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், மகளை தன்னுடன் அழைத்துச்செல்லாமல், தனது தாயாரின் பொறுப்பிலேயே விட்டுச் சென்றார். ஆனால், வயது முதிர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பேத்தியை வளர்க்க முடியாது என்று சு கூறினார். ஆனால், அதனை மகன் ஏற்கவில்லை.
இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து மகன் மீது நீதிமன்றத்தில் சு வழக்கு தொடர்ந்தார். அதில், மகனுக்கு குடும்ப பொறுப்பு இல்லை என்றும், கடந்த 15 ஆண்டுகளாகப் பேத்தியை வளர்த்ததற்குப் பராமரிப்பு கட்டணமாக 3.6 லட்சம் யுவான் (தோராயமாக ரூ.45 லட்சத்திற்கும் அதிகமாக) வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், தனக்கு மாத சம்பளம் 3 ஆயிரம் யுவான் (தோராயமாக ரூ.37,000) மட்டுமே இருந்ததால் தனது சக்திக்குட்பட்டே, தாயார் மகளைக் கவனித்ததாக லியாங் வாதிட்டார். எனினும், இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. மேலும், குழந்தையை வளர்ப்பதில் முதல் பொறுப்பு பெற்றோருக்கே உரியது என்றும் நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி தாய்க்கு 2 லட்சம் யுவான் (தோராயமாக ரூ.24 லட்சம்) இழப்பீடு வழங்க லியான் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கூட்டுக்குடும்பமாக வாழும் முறை இயல்பானது. அதில், பேரக்குழந்தைகளைத் தாத்தா பாட்டிகள் வளர்ப்பது இயல்பானதாகவே இருந்தாலும், அதைக் கட்டாயமாகவோ அல்லது கடமையாகவோ கருத முடியாது என்றும் அந்த வழக்கில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
