வாரத்தில் 5 நாட்கள் வேலை திட்டம் மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை (PLI) திட்டத்தில் மாற்றம் உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் செய்யப்போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) அறிவித்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் 11-ம் தேதி ஒருநாள் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம் நடைபெறும். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தப்படும். இந்தக் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஏஐபிஇஏ, ஏஐபிஓசி, என்சிபிஇ உட்பட 7 முக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யூ (UFBU), பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு மற்றும் கூட்டுறவு வங்கிகளின் 90 சதவீத ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் அழைப்பு விடுத்துள்ள இரண்டாவது வேலைநிறுத்தம் இதுவாகும்.
முன்னதாக, மார்ச் 2025-இல் அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத் தொகை (PLI) திட்டத்தில் திருத்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தியதால் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக, மார்ச் 2026-இல் அந்த புதிய நடைமுறையை அமல்படுத்துமாறு வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பிரச்சினை நிலுவையில் இருக்கும்போது, ஆகஸ்ட் 21, 2026 அன்று நிதி அமைச்சகம் மீண்டும் வங்கிகளுக்கு செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை (PLI) திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது. இது தொழில்துறை தகராறு சட்டத்தை மீறும் செயல் என்று தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
முக்கிய கோரிக்கைகள்
வாரத்தில் 5 நாட்கள் வேலை:
2015-இல் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டபோதே, 5 நாட்கள் வேலை திட்டத்திற்கு வங்கிகள் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டன. 2024 மார்ச் 8 ஊதிய ஒப்பந்தத்தில், அனைத்து சனிக்கிழமைகளுக்கும் விடுமுறை அளிப்பதற்கு ஈடாக, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் கூடுதல் 40 நிமிடங்கள் பணிபுரிய ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர்.
ரிசர்வ் வங்கி, எல்ஐசி, நபார்டு போன்ற நிறுவனங்களில் 5 நாட்கள் வேலை முறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், வங்கி ஊழியர்களின் இந்த 2 ஆண்டு கால கோரிக்கைக்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருக்கின்றனர்.
பி.எல்.ஐ. திட்டம் (PLI Scheme):
2020 ஒப்பந்தத்தின்படி, துப்புரவு பணியாளர்கள் முதல் பொது மேலாளர்கள் வரை அனைவருக்கும் வங்கியின் செயல்திறன் அடிப்படையில் 1 முதல் 15 நாட்கள் ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது.
ஆனால், நவம்பர் 2024-இல் நிதி அமைச்சகம் கொண்டு வந்த புதிய விதியின்படி, ஸ்கேல் IV முதல் VII வரையிலான உயர் அதிகாரிகளுக்கு (மொத்த ஊழியர்களில் 5%) 365 நாட்கள் வரை ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், மீதமுள்ள 95% ஊழியர்களுக்கு 15 நாட்கள் மட்டுமே கிடைக்கும். இந்த பெரும் வேறுபாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் இதில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
