மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளது. அதன்படி,தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI), மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI-M) களமிறங்குகின்றன.
இடைத்தேர்தலில் களமிறங்கிய இடதுசாரிகள்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியபெ. சண்முகம்கூறுகையில், மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துக் களம் காணுகின்றன. தவெக அரசுக்கான வெளியிலிருந்து அளிக்கும் ஆதரவு தொடரும்.தனித்துப் போட்டியிடும் முடிவால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.தவெக-வை ஆதரிக்கவில்லை என்பதற்காக இதனை திமுக-விற்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மூன்று அணிகளுக்கும் எதிராகவே இடதுசாரிகள் போட்டியிடுகின்றன என்று தெரிவித்தார்.
5 முனைப் போட்டியாக மாறும் தேர்தல் களம்
இந்த இடைத்தேர்தலில் கூட்டணி இன்றித் தனித்துப் போட்டியிடும் முடிவை இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ளது அரசியல் களத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.குறிப்பாக இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக , நாதக உள்ளிட்ட கட்சிகளிடையே நான்முனை போட்டி நிலவும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது 5 முனையாக மாறியுள்ளது. இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டி என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தம் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தவெக தரப்பில் இருந்து ஆதரவு கோரி சென்றவர்களை இடதுசாரி தலைவர்கள் நேரடியாக சந்திக்கவில்லை என்றும், கூட்டுக் குழுவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடும் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து பிரச்சாரம் செய்வது இயல்பானது. அந்த வகையில், தவெக அரசு மீதான விமர்சனங்களை முன்வைத்து, மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள், சட்டங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான தங்களது நிலைப்பாடுகளை எடுத்துரைத்துஇடதுசாரிகள் பிரச்சாரம்மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக இடதுசாரிகள் கூறியுள்ள நிலையில், அந்த ஆதரவை தேவையான நேரத்தில் திரும்பப் பெறும் அரசியல் நிலைப்பாடும் அதில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களையே மீண்டும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக தவெக நிறுத்துவது வாக்காளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பக்கூடும் என்றும் அவர் கூறினார். தவெக மற்றும் திமுகவுக்கு மாற்றான அரசியல் தளத்தை உருவாக்கும் நோக்கில், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை ஈர்க்க இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவது இந்த இடைத்தேர்தல் களத்தில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாருடைய வாக்குகள் பிரியும்?
இடதுசாரிகளின் தனித்துப் போட்டி தேர்தல் முடிவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வியாக உள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாக களமிறங்கியுள்ள நிலையில், இடதுசாரிகளின் வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக மாற வாய்ப்புள்ளது.
இடதுசாரிகளின் பாரம்பரிய வாக்காளர்கள் எந்தப் பக்கம் செல்கிறார்கள் என்பதுடன், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளில் ஒரு பகுதி இடதுசாரிகள் பக்கம் திரும்பினால் அது தவெக, அதிமுக அல்லது திமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் போட்டி அமையும் பட்சத்தில், சில ஆயிரம் வாக்குகள்கூட தேர்தல் முடிவை மாற்றக்கூடியதாக இருக்கும். எனவே, இடதுசாரிகள் எவ்வளவு வாக்குகளைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டிலும், அவர்கள் பெறும் வாக்குகள் எந்தக் கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கின்றன என்பதே இந்த இடைத்தேர்தலில் முக்கியமாகப் பார்க்கப்படும்.
