புதுச்சேரி தேசிய மாணவர் படை சார்பில், “கடலுக்குப் போவோம் – திட்டம் ஸ்வர்ணம் (SWARNUM) 2026” என்னும் பாய்மரப்படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று (27.07.2026) நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்களுக்குத் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, முதலமைச்சர் ந. ரங்கசாமி கலந்துகொண்டு கடல் சாகசப் பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பயணத்தில் பங்கேற்கும் மாணவ மாணவியரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் A. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் C. ஐயப்பன் (எ) மொட்டையப்பன், புதுச்சேரி தேசிய மாணவர் படையின் குரூப் கமாண்டர் அஷிஷ் திவாரி மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இன்று தொடங்கிய இந்த கடல் சாகசப் பயணம் வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வரை மொத்தம் 63 நாட்கள் நடைபெற உள்ளது. சுமார் 800 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணம், புதுச்சேரியில் தொடங்கி கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் சென்னை உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை பகுதிகளில் பயணிக்கிறது. இந்தப் பயணத்தில் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தேசிய மாணவர் படை கேடட்டுகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கடற்பயணத்தின் மூலம் கடல்சார் வழிநடத்தல், கப்பல் இயக்கத் திறன், தலைமைத்துவம், குழுப்பணி, மன உறுதி, உயிர் காக்கும் திறன்கள் மற்றும் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியம் குறித்த நடைமுறை அனுபவங்களை மாணவர்கள் பெறவுள்ளனர்.
இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி, நீலப் பொருளாதாரம், கடல்சார் பாரம்பரிய பாதுகாப்பு, மீன்வள மேம்பாடு, கடல்சார் தொழில்நுட்ப புதுமைகள், நீருக்கடிப் பாரம்பரிய ஆய்வு மற்றும் கடல்சார் அருங்காட்சியகங்கள் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நிலையான கடல்சார் வளர்ச்சியில் முன்னணி மையங்களாக உருவாக்குவதோடு, பாரம்பரிய கடல்சார் அறிவையும் நவீன நீலப் பொருளாதாரக் கொள்கைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் இப்பயணம் நடைபெறுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
