5ஜி நெட்வொர்க் சேவையின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தியா இப்போது 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. உலகளவில் 5ஜி சேவைகள் இன்னும் விரிவடைந்து வரும் நிலையில், இந்திய அரசு தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும் விதமாக, 6ஜிக்கான அடித்தளத்தை ஏற்கனவே அமைத்துவிட்டது. டிஜிட்டல் உலகில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்காவின் தலைமையிலான ஒரு முக்கிய சர்வதேச கூட்டணியில் இணைய இந்தியா முடிவு செய்துள்ளது. இது அடுத்து வரும் ஆண்டுகளில் நம் நாட்டின் தொழில்நுட்பத் துறையின் ஒட்டுமொத்த சூழலையும் மாற்றியமைக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
6ஜி நெட்வொர்க்குகள் இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) முதல் ரோபோட்டிக்ஸ் வரை அனைத்துத் துறைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எதிர்காலத் தகவல் தொடர்புப் புரட்சியை வடிவமைப்பதற்கான ஒரு உலகளாவிய முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 6ஜில்நுட்பத்தை உருவாக்கும் 24 நாடுகளைக் கொண்ட வலுவான குழுவில் இந்தியாவும் இப்போது இணைந்துள்ளது. அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள சேப்பல் ஹில் பகுதியில் நடைபெற்ற G20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தின்போது இந்த முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோருக்கு இடையே விரிவான இருதரப்பு விவாதங்கள் நடைபெற்றன. இந்த உரையாடல்களின் முடிவில், இக்கூட்டணியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைவது உறுதி செய்யப்பட்டது. G20 புத்தாக்கக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியக் குழுவிற்கு இணையமைச்சர் ஜிதின் பிரசாதா தலைமை தாங்கினார். அவருடன் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
இந்தக் குழு 6ஜி துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் பணியாற்றும் என்று கூறப்பட்டுள்ளது. மாநாட்டின் முடிவில், அனைத்து நாடுகளின் அமைச்சர்களும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அதில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, அமெரிக்க அதிகாரியான ஹோவர்ட் லுட்னிக் உடன் 6ஜி தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், வேறு பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்கை நுண்ணறிவு தொடர்பான செமிகண்டக்டர் மற்றும் தரவு மையங்கள் (data centers) குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இச்சந்திப்பின் போது, ’இந்தியா செமிகண்டக்டர் மிஷன்’ (ISM 2.0) திட்டத்தில் அமெரிக்காவின் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இணையமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கூட்டாண்மையை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இத்துறைகள் அனைத்தும் அடிப்படையானவை என்று ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். அதோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான உபசரிப்பிற்காக G20 தலைமைப் பொறுப்பை வகிக்கும் அமெரிக்காவிற்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்கப் பயணத்தின் போது நடைபெற்ற இந்த முக்கிய சந்திப்புகள், உலகளாவிய தொழில்நுட்ப முன்னெடுப்புகளை வடிவமைப்பதில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள் மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்வதில் இந்தியா கொண்டுள்ள வலுவான நிலையை இந்தக் கூட்டாண்மை காட்டுகிறது. இத்தொழில்நுட்பங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான புத்தாக்க முயற்சிகளுக்குப் புதிய வழிகளையும் திறக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
