டாலின்: உக்ரைனுக்கு உதவ இந்திய நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட, 769 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து, எஸ்டோனியா நாட்டின் ராணுவ அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் ராஜினாமா செய்தார்.
ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவின் பாதுகாப்பு முதலீட்டு மையம், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் போர் தேவைக்கு உதவும் விதமாக, பீரங்கி குண்டுகளை வழங்க முடிவு செய்தது. இதற்காக 2024ல், இத்தாலியில் பதிவு பெற்ற, ‘டேட்டாசெல் எஸ்.ஆர்.எல்., என்ற நிறுவனத்துடன், 768.50 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனத்தை அதே ஆண்டில், இந்திய நிறுவனமான, ‘நெகோ டிபென்ஸ் மியூனிஷன்ஸ்’ கையகப்படுத்தியது.
அந்நிறுவனம் வழங்கிய வெடி பொருட்கள் தரமற்று இருந்ததாக எஸ்டோனியா நாட்டின் தணிக்கை துறையினர் தெரிவித்தனர். விசாரணையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆயுதங்களை தயாரிப்பதிலோ அல்லது விற்பனை செய்வதிலோ, முன் அனுபவம் இல்லாதது தெரிய வந்தது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஒப்பந்தத்தை ரத்து செய்து, முன்பணமாக வழங்கிய தொகையை திரும்ப தரும்படி கடந்தாண்டே எஸ்டோனியா அரசு கோரியது. ஒப்பந்தப்படி, 50 சதவீதத்துக்கும் மேலான ஆயுத தளவாடங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக, நெகோ டிபென்ஸ் மியூனிஷன்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தை, வர்த்தக தகராறுகளை கையாளும், பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நடுவர் மற்றும் சமரச மையத்துக்கு எஸ்டோனியா அரசு எடுத்துச் சென்றுள்ளது.
இந்நிலையில், எஸ்டோனியா ராணுவ அமைச்சர் ஹன்னோ பெவ்கூர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இதில் தனக்கு நேரடி தொடர்பு இல்லையென்றாலும், தார்மிக அடிப்படையில் விலகுவதாக அவர் தெரிவித்தார்.
