‘832 ஏக்கர் அரசு நிலம் சும்மா கிடக்கு; இங்க விமான நிலையம் அமையுங்க’: கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய குரல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வசமுள்ள 832 ஏக்கர் நிலத்தில் சர்வதேச கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஆகியோருக்குக் குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்துக் குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு மையம்:

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, முக்கடல்களும் சந்திக்கும் புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலாத்தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தைக் காண இங்கு வருகின்றனர். இப்பகுதியில் விமான நிலையம் அமைக்க ஏதுவாக, வடக்கு தாமரைகுளம் உப்பளப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 832 ஏக்கர் நிலம் முழுமையாக அரசு வசமே உள்ளது.

30 ஆண்டுகாலக் கோரிக்கை:

இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், குமரி மகா சபையினர் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் இருமுறை நேரில் வந்து இந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர்.

தொழில் வளர்ச்சிக்குத் தேவை:

மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் விமான நிலைய உள்கட்டமைப்பு மிகவும் அவசியமாகும். தற்போது விமான நிலையம் இல்லாத காரணத்தால், இம்மாவட்டத்திற்கு வரவிருந்த பல முக்கிய பெருநிறுவனங்கள் தங்களது முதலீடுகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றும் சூழல் உருவாகியுள்ளது.

முக்கிய நிறுவனங்களின் பாதுகாப்பு:

தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), காவல் கிணறு மகேந்திரகிரி ராக்கெட் மையம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், கூடங்குளம் அணுமின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிதான மணல் ஆலை (IREL) போன்ற நாட்டின் முக்கிய உத்திசார் அமைப்புகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் இங்கு விமான நிலையம் அமைப்பது மிக அவசியமாகும். மேலும், அந்தமான்-நிகோபார் தீவுகளில் அமையவுள்ள சர்வதேச வர்த்தகத் துறைமுகப் பாதுகாப்பிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

மக்கள் பங்கேற்பு நிதி மாதிரி (CIAL Pattern):

இத்திட்டத்தைச் செயல்படுத்தக் கேரளா மாநில கொச்சி சர்வதேச விமான நிலைய (CIAL) மாதிரியைப் பின்பற்றலாம். கொச்சி விமான நிலையம் பொதுமக்களின் பங்கு மூலதனத்துடன் (Public-Private Partnership / Crowdfunding) தொடங்கப்பட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பங்குதாரர்களுடன் மிகச் சிறப்பாக லாபத்தில் இயங்கி வருகிறது. இதேபோன்று, கன்னியாகுமரி விமான நிலையத் திட்டத்திற்கும் நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பங்குகள் (Shares) வழங்கித் திட்டத்தைச் செயல்படுத்தினால், நில கையகப்படுத்துதல் மற்றும் நிதித் தாமதம் போன்ற பிரச்சனைகள் இன்றி இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த முடியும்.

எனவே, நாட்டின் பாதுகாப்பு, சுற்றுலா மேம்பாடு மற்றும் கன்னியாகுமரியின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 832 ஏக்கர் நிலத்தில் பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்கக் காலதாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்க தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.

Source link