குற்றம் செய்த நபர்களுக்குப் பாரபட்சம் பார்க்காமல் அதிரடியாக அதிகபட்ச தண்டனைகளை வழங்கி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவர் நீதிபதி ரவிகுமார் திவாகர்.
உத்திர பிரதேச மாநிலத்தில், முசாபர் நகரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக பணிபுரிந்தவர் ரவிக்குமார் திவாகர். இவர் தனது பணிக்காலத்தில் ஏராளமான வழக்குகளை விசாரணை செய்து, அவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். குறிப்பாக, பல்வேறு குற்ற வழக்குகளை விசாரணை செய்த அவர், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்கியிருந்தார்.
அந்த வகையில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தில், 11 வழக்குகளில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்து இவர் தீர்ப்பளித்திருந்தார். இதற்கு, முன்பு பரேலியில் 13 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தார். இவரது இந்த அதிரடியான தீர்ப்புகள் நாடுமுழுவதும் கவனம் பெற்றன.
இந்த சூழலில், இவர் பணிபுரிந்த நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பான 97 வழக்குகள், நிர்வாக உத்தரவு மூலம் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இதற்கு இவர் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். மேலும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் அதிகார வரம்புகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து, அவர் தமக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் நீக்கப்பட்டதால் தமது பாதுகாப்பு பலவீனமடைந்துவிட்டதாக மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு அவர் கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முசாபர் நகர் குடும்ப நல நீதிமன்றத்தின் கூடுதல் முதன்மை நீதிபதியாக அவர் மாற்றப்பட்டுள்ளார். நீதிபதி ரவிகுமார் திவாகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அம்மாநிலத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
