ஆமதாபாத்: குஜராத் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர். 15க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஆமதாபாத் ரமோல்-கத்ராட் சாலையில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று (ஜூலை 18) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ மற்ற இடங்களுக்கும் பரவியது.
பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்ததில் அங்கு இருந்த 8 தொழிலாளர்கள் சிக்கி பலியாகினர். தகவலறிந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் சம்பவ பகுதிக்குச் சென்று, சடலங்களை மீட்டனர். மேலும் படுகாயம் அடைந்து தவித்த 15க்கும் அதிகமானோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாசுகள் வெடித்துச் சிதறிய போது அதன் சத்தம் கிட்டத்தட்ட 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு எதிரொலித்தது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை இயங்க சட்டப்படி உரிமம் பெறவில்லை என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பட்டாசுகள் வெடித்ததற்கான காரணம் குறித்தும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
