தொடரை வெல்லுமா இந்தியா: ஜிம்பாப்வே அணியுடன் 2வது மோதல்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ‘டி-20’ போட்டியில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றும் இலக்கில் இந்திய அணி களமிறங்குகிறது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இன்று, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கும் 2வது போட்டியில் இவ்விரு அணிகள் மீண்டும் மோதுகின்றன.

சமீபத்தில் அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிராக ஏமாற்றிய இந்திய அணி, இன்று அசத்தினால் புதிய ‘டி-20’ கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் முதல் கோப்பையை உறுதி செய்யலாம்.

வைபவ் நம்பிக்கை: முதல் போட்டியில் 18 பந்தில் அரைசதம் விளாசிய இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மீண்டும் சிக்சர் மழை பொழிய காத்திருக்கிறார். இப்போட்டியில் ஒரு ரன்னில் அவுட்டான அபிஷேக் சர்மா, எழுச்சி கண்டால் நல்ல துவக்கம் கிடைக்கும். இஷான் கிஷான் (35 ரன்), கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் (28*) மீண்டும் கைகொடுக்கலாம். திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே அதிரடி காட்டினால் இமாலய ஸ்கோரை பெறலாம்.

வேகப்பந்துவீச்சில் மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் கூட்டணி அசத்துகிறது. முதல் போட்டியில் தலா 2 விக்கெட் கைப்பற்றிய இவர்கள் மீண்டும் மிரட்டலாம். ‘சுழலில்’ ரவி பிஷ்னோய் ஆறுதல் தருகிறார்.

கட்டாய வெற்றி: தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஜிம்பாப்வே களமிறங்குகிறது. ‘டாப்-ஆர்டரில்’ ஏமாற்றிய பிரைன் பென்னெட், பென் கர்ரான், டியான் மையர்ஸ், கேப்டன் சிக்கந்தர் ராசா எழுச்சி காண வேண்டும். ரியான் பர்ல் (26), வெஸ்லி மதேவேரே (39), மருமானி (27*) மீண்டும் கைகொடுக்கலாம். ‘வேகத்தில்’ முசரபானி, ரிச்சர்டு நிகரவா நம்பிக்கை தருகின்றனர்.

இதுவரை

சர்வதேச ‘டி-20’ அரங்கில் 15 முறை மோதிய போட்டியில் இந்தியா 12, ஜிம்பாப்வே 3ல் வெற்றி பெற்றன.

Source link