பி.எம்.எஸ்., சேவை விதிகளில் மாற்றம் செபியின் முடிவால் என்ன நடக்கும்?

போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் விதிகளில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள செபி ஆலோசித்து வருகிறது. இதன்படி, மியூச்சுவல் பண்டுகளில் மட்டும் முதலீடு செய்யும் எம்.எப்., – பி.எம்.எஸ்., எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த செபி முன்மொழிந்துள்ளது.

இந்திய பி.எம்.எஸ்., ஒழுங்குமுறை அமைப்பு ஏற்கனவே வலுவானதாக இருந்தாலும், தற்போதைய முன்மொழிவுகள் அதை மேலும் நவீனப்படுத்தி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்லும் முயற்சியாக கருதப்படுகின்றன.

முக்கிய அம்சங்கள்

* பி.எம்.எஸ்., சேவைகளில் முதலீடு செய்ய குறைந்தபட்சமாக 50 லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில், எம்.எப்., – பி.எம்.எஸ்., திட்டத்தில் 25 லட்சம் ரூபாய் முதலே முதலீடு செய்யலாம்

* இத்திட்டத்தில் மியூச்சுவல் பண்டுகளின் நேரடி திட்டங்கள், இ.டி.எப்.,கள் மற்றும் எஸ்.ஐ.எப்., உள்ளிட்டவைகளில் முதலீடு செய்யப்படும்

* ஆண்டுக்கு அதிகபட்சமாக 2.50 சதவீத மேலாண்மை கட்டணம் அல்லது முதலீட்டின் லாபத்தை பொறுத்த செயல்திறன் கட்டணம் வசூலிக்கப்படும்

* நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிகர மதிப்பு தேவை 5 கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக குறைக்கப்படும்.

முதலீட்டு நன்மைகள்
* மியூச்சுவல் பண்டு மற்றும் பி.எம்.எஸ்., அம்சங்கள் இணைந்த எம்.எப்., – பி.எம்.எஸ்., போன்ற புதிய திட்டங்கள் வாயிலாக கூடுதல் முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்கும்
* போர்ட்போலியோ மேனேஜர்களுக்கு கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பதால், வாடிக்கையாளர்களுக்கும் விரிவான முதலீட்டு உத்திகள் கிடைக்கலாம்
* முதலீட்டு அணுகுமுறை, கட்டணங்கள் மற்றும் அதில் உள்ள இடர்கள் உள்ளிட்ட தகவல்களில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரிக்கலாம்
* புதிய முதலீட்டு வாய்ப்புகள் அனுமதிக்கப்படுவதுடன், அவற்றுக்கு ஏற்ற இடர் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாடுகளும் வலுப்படுத்தப்படலாம்.

கவனிக்க வேண்டியவை
* எம்.எப்., – பி.எம்.எஸ்., என்பது சாதாரண மியூச்சுவல் பண்டு அல்லது வழக்கமான பி.எம்.எஸ்., கிடையாது; எனவே, இதன் கட்டணம், இயங்கும் முறை, இடர்களை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்
* புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் பயன்பாட்டால், சில போர்ட்போலியோக்களின் முதலீட்டு அமைப்பு மேலும் சிக்கலாக மாறக்கூடும்
* டெரிவேட்டிவ்ஸ் பயன்பாடு அனுமதிக்கப்படுவதால், சில போர்ட்போலியோக்களின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது
* முதலீடு செய்வதற்கு முன் வழங்கப்படும் தகவல்கள் மற்றும் பெற வேண்டிய ஒப்புதல்கள் அதிகரிக்கலாம்.

Source link