சென்னை: கோவில்களில் தரிசன கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, ஹிந்து முன்னணி சார்பில், தமிழகம் முழுதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஹிந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ‘கோவில் தரிசன கட்டணத்தை, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; கோவில் நிர்வாகத்தில் வெளிப் படைத்தன்மை வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது குறித்து, ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலர் மனோகர் அளித்த பேட்டி:
கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் முழு விபரம், பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிய வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட அல்லது காணாமல் போனதாகக் கூறப்படும் கோவில் சொத்துக்கள் குறித்து, விசாரணை நடத்த வேண்டும்.
கோவில் சொத்துக்களை பாதுகாத்து, கோவில் பயன்பாட்டிற்கும், அறப் பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும். சட்டவிரோத ஆக்கிரமிப்பு இருந்தால், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களில் நித்ய பூஜை, அபிஷேகம், திருவிழாக்கள் போன்ற வழிபாடுகள் முறையாக நடக்க வேண்டும். பழமையான சிலைகள் அந்தந்த கோவில்களிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். வி.ஐ.பி., தரிசனம் உள்ளிட்ட தரிசன பாகுபாடு இருக்கக் கூடாது.
பணம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை, மற்றவர்களுக்கு நீண்ட காத்திருப்பு என்ற நிலை இல்லாமல், பக்தர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
