‘பார்ட்டி ஃபண்டுனா என்னன்னு உங்களுக்கு தெரியாதா? தனி அறிக்கை ரெடி பண்றோம்’: தி.மு.க-வுக்கு அமைச்சர் மரிய வில்சன் எச்சரிக்கை

“பார்ட்டி ஃபண்டு என்றால் என்னவென்று தெரியாத மாதிரி பேசிவிட்டு வெளிநடப்பு செய்கிறார்கள், என்னமா நடிக்கிறார்கள்” என தி.மு.க-வைக் கடுமையாக விமரிசித்துள்ள அமைச்சர் மரிய வில்சன், வருகிற சட்டமன்ற அமர்வில் ஊழல் பட்டியலுடன் கூடிய தனி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், 100% ஊழலற்ற தமிழ்நாட்டை அடுத்த தலைமுறை மாணவர்கள் காண்பார்கள் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் த.வெ.க கல்வி விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: “கடந்த வாரம் சட்டமன்றம் மூன்று நாட்கள் நடந்தது, மனசாட்சியே இல்லாத மாதிரி சிலர் நடந்து கொள்வார்கள் இல்லையா, அதை நான் பார்த்தேன். எதுவுமே நடக்காத மாதிரி, பார்ட்டி ஃபண்டுனா என்னன்னு தெரியாத மாதிரி, என்ன அது பார்ட்டி ஃபண்டு அப்படின்னு சொல்லிவிட்டு வெளியே நடந்து போனார்கள். அதில் ஒருத்தர் இந்த தொகுதியில் ஜெயித்தவர். அப்படின்னா என்ன அது என்று கேட்டு வந்தார். அவருக்கு நான் இந்த மேடை வாயிலாக சொல்கிறேன். இது விருது வழங்கும் விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் நான் சொல்லிக்கொள்கிறேன். முதல் முறையாக நான் பேசுகிறேன், வரப் போகிற சட்டமன்ற அமர்வில் நீங்கள் கண்டிப்பாக பார்ப்பீர்கள், தனியாக ஒரு அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு தணிக்கை கோப்பை தாக்கல் செய்கிறோம். அன்றைக்கு இருக்கிறது ஊழல். அந்த ஊழல் பட்டியலில் என்ன இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். 

என்ன நடிப்பு, எங்கள் தலைவரே நடிப்பை விட்டுவிட்டு வந்து விட்டார்கள். நீங்க என்னமா நடிக்கிறீர்கள், முதலில் மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வளர்ப்பு அப்படி இருக்கிறது. எங்கள் தலைவர் அமைதியாக, அழகாக, பொறுப்பாக, மரியாதையாக பேசுபவர். எங்களுக்கு எல்லாம் பயிற்சி கொடுத்திருக்கிறார். பொதுச் செயலாளர் பேச்செல்லாம் பொறுமையாக பேசுவார், அழகாக பேசுவார், கேட்பதற்கு இனிமையாக இருக்கும். நீங்கள் பேசுகிற பேச்சு எல்லாம் ஒருமையில் பேசுகிறீர்கள். நீங்கள் என்னதான் எங்களை உசுப்பி விட்டாலும் நாங்கள் அப்படி பேசப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் சின்ன வயதில் இருந்து ஒரு கோட்பாட்டில் வளர்ந்திருக்கிறோம்.

எங்கள் அம்மா எப்படி எங்களை ஒரு தமிழ் மீடியத்தில் படிக்க வைத்து பின்னர் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்து வளர்த்தார்களோ, என்னுடைய மாமனார் ஜேப்பியார் 1988-ல் ஒரு இன்ஜினியரிங் காலேஜை தொடங்கி ஒரு கல்வி நிறுவனத்தை எப்படி உருவாக்கினாரோ, அப்படி என் வாழ்க்கையில் ஒரு கோட்பாடு உடன் இருக்கிறேன். தன்னம்பிக்கை சுய ஒழுக்கம், சுயமரியாதை இந்த மூன்றும் தான் என்னுடைய வாழ்க்கை, இதுதான் அடிப்படை. அதனால், முதலில் மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும். உங்களை நாங்கள் மனிதனாக தான் பார்க்கிறோம். ஆனால், ஒரு அளவு இருக்கிறது. அந்த அளவுக்கு மேல் மேல் நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் எங்களுக்கும் பேசத் தெரியும். அதை நாங்கள் வேற மாதிரி பேசுவோம், இப்படி பேச மாட்டோம். ஊழல் அறிக்கை நிறைய வந்து கொண்டே இருக்கும். அப்படி தான் நாங்கள் பேசுவோம். 

வரப்போகிற நாட்கள் தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கி மட்டுமே இருக்கும். அடுத்த தலைமுறையினர் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், மாணவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான், ஊழல் இல்லாத தமிழ்நாட்டில் எங்கள் வாழப் போகிறீர்கள். 100% நம்பிக்கையோடு இருங்கள். இதை கெடுப்பதற்கு பலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சி 20 நாட்கள் மூன்று மாதம் ஐந்து மாதம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் ஐந்து மாதம் ஆறு மாதத்தில் ‘அட்ரஸ்’ இல்லாமல் போகப் போகிறார்கள்.” என்று அமைச்சர் மரிய வில்சன் பேசினார்.

Source link