மதுரை: உலகிலேயே அதிக வெப்ப அபாயம் உள்ள 205 நகரங்கள் பட்டியலில் மதுரை 7-வது இடத்தைப் பிடித்துள்ளதாக பிரிட்டன் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வு மதுரைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் நாட்டிலுள்ள 17 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. ஈராக் நாட்டின் அல்பஸ்ரா நகரம் முதல் இடமும், அஹமதாபாத் 2-வது இடமும், நாக்பூர் 4-வது இடமும் பிடித்துள்ளன. வெப்பத்தில் ஈராக்குடன் போட்டிபோடும் அளவுக்கு மதுரையின் வெப்பமும் அதிகரித்துள்ளது.
இந்த வெப்பம், ஏதோ இன்றோ நேற்றோ அதிகரித்துள்ளதாகக் கருதிவிட முடியாது. கடந்த 30, 40 ஆண்டுகளாக பசுமைப் பரப்பு குறைவு, நீர்நிலைகள் அழிப்பு, திட்டமிடப்படாத நகர்ப்புற வளர்ச்சி, திரும்பிய பக்கமெல்லாம் மூச்சு முட்டும் கான்கிரீட் கட்டிடங்கள் மற்றும் சிமென்ட் சாலைகள் அதிகரிப்பு போன்றவை முக்கியக் காரணங்கள் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.
ஒரு காலத்தில் நகரின் மையத்தில் வற்றாத வைகை ஆறு, சோழவந்தான், நத்தம், அழகர்கோவில், திருமங்கலம் என திரும்பிய திசையெங்கும் சாலைகளின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் நிறைந்த பசுமைச் சாலைகள் நிறைந்திருந்தன.
ஆனால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அந்தச் சாலைகள் மரங்களின்றி வெட்ட வெளியாக மாறிவிட்டன. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிலும் உள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட மற்ற பெரும்பாலான வீதிகளில் பெரிய மரங்கள் அதிகம் இருந்தன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டபோது மரங்களை அகற்றியதோடு மட்டுமின்றி இனி மரங்கள் நடமுடியாத நிலையையும் ஏற்படுத்திவிட்டனர்.
தமிழ்தாசன்
வெப்ப அச்சுறுத்தலுக்கு உள்ளா குதல் (Hazard Exposure), பாதிப்புக்கு ஆளாகும் தன்மை (Vulnerability) மற்றும் வெப்பத்தைச் சமாளிக்கும் திறன் (Coping Capacity) ஆகிய 3 முக்கிய காரணங்கள் அடிப்படையில் மதுரையை ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இந்தப் பட்டியலில் சேர்த்து ள்ளதாக ஆதங்கப்படுகிறார் சுற்றுச் சூழல் ஆர்வலரும், மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை நிர்வாகியுமான தமிழ்தாசன்.
அவர் மேலும் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பசுமைப் பரப்பு, தற்போது மதுரையில் 15 சதவீதம் குறைந்துள்ளது.
நீர்நிலைகள், புதர் காடுகள் அழிவு, கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து மிக அதிக தொலைவில் உள்ள நகரம், வெப்பத்தால் முதியோர் அதிகமாக பாதிக்கப்படுவது, வெப்பத் தாக்கத்தால் இறப்போர் எண்ணிக்கை, சிகிச்சைக்கு மருத்துவமனைக்குச் செல்வோர் அதிகரிப்பு போன்றவற்றை அடிப்டையாகக் கொண்டு மதுரை, இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
1984-ல் மதுரை மாநகரத்தின் செயற்கைக்கோள் படம்.
வனத்துறை சட்டப்படி 33 சதவீதம் பசுமைப் பரப்பு இருக்க வேண்டும். ஆனால், தேசிய, தமிழக சராசரியைவிட மதுரையில் பசுமைப் பரப்பு குறைந்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை செயற்கைக்கோள் படங்களில் மதுரை மாநகர் பசுமையை இழந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பசுமைச் சாலைகள், நீர்நிலைகளை இழந்துள்ளோம்.
அவற்றை ஈடுசெய்ய அரசு நிர்வாகங்களும், மக்களும் எதையும் செய்யவி்ல்லை முன்பு மதுரை நகரில் ஏராளமான கோயில் காடுகள், புதர் காடுகள், சிறிய மலைக் குன்றுகள் இருந்துள்ளன. தற்போது அந்தக் காடுகளையும், வன உயிர்களையும், பல்லுயிர்களையும் இழந்துள்ளோம்.
உதாரணமாக திருப்பரங்குன்றம் அருகே இருந்த பச்சை நாச்சிமலை, வெல்லுத்து மலை, புறாக்கூடு மலை போன்றவை தற்போது இருந்த இடம் தெரியாமல் மாறிவிட்டன.
நகரமைப்பு விரிவாக்கத்தை யோசித்த மாவட்ட ஆட்சியர்கள், இழப்பை பற்றி சிந்திக்கவே இல்லை. இன்னும் நாம் சிந்திக்காவிட்டால் 20, 30 ஆண்டுகளில் வாழத் தகுதியற்ற நகரமாக மதுரை மாறும்.
2022-ல் மதுரை மாநகரத்தின் செயற்கைக்கோள் படம்.
இடையப்பட்டி கோயில் காட்டில் புதர்க்காடு 5,000 ஏக்கரில் இருந்துள்ளது. அங்கு ராணுவ, காவல் துறை அமைப்புகள், பள்ளிக்கூடம் போன்றவற்றுக்காக இவற்றை இழந்துள்ளோம். தற்போது அங்கு மீதமுள்ள 400 ஏக்கர் புதர்க்காடுகளை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறோம். திருமங்கலம் பகுதியில் வறல் புல்வெளி அதிகம் இருந்துள்ளது.
இவை நேரடியாக நிழல் தராவிட்டாலும் வெப்பத்தை உள்வாங்கி எதிரொலிக்காது. குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். 60 சதவீதம் கார்பனை வாங்கி வைத்துக் கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்நிலைகள், வெப்பத்தை வாங்கி ஆவியாகும்போது காற்றை குளிர்வித்து வெப்பநிலையை குறைத்து அதனைச் சுற்றியுள்ள 300 மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளை ஏசி போல் பாதுகாக்கும்.
அப்படி மதுரையைச் சுற்றியிருந்த 20 கண்மாய்களை இழந்துள்ளோம். நிலப்பகுதிகள் பகலில் வெப்பத்தை உள்வாங்கி இரவில் அவற்றை வெளியிடும். அப்படியொரு, செயல்பாடே தற்போது மாநகர் பகுதியில் இல்லை.
சோழவந்தான் பகுதியில் மதுரைக்குள் நுழையும் வைகை ஆறு 400 மீட்டர் அகலம் கொண்டதாகவும், செல்லூர், கோரிப்பாளையம், சிம்மக்கல் பகுதியில் 119 மீட்டராகவும் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி விட்டது.
மரங்கள் சூழ்ந்து காணப்பட்ட மதுரை-அழகர்கோவில் சாலை தற்போது வெட்டவெளியாக காட்சியளிக்கிறது. படம்: நா.தங்கரத்தினம்
நகருக்குள் ஓடிய கிருதுமால் நதி அழிந்துபோய் விட்டது. தற்போது வைகை ஆறு சாக்கடை குட்டையாக மாறிவிட்டது, இவ்வாறு அவர் கூறினார்.
வளர்ச்சித் திட்டங்களை என்ன வடிவில் கொண்டுவர வேண்டும், கார்பன் உமிழ்வை எப்படி கட்டுப்படுத்த வேண்டும், அழிக்கப்படும் பசுமைப் பரப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது போன்ற எந்த ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களிடம் இல்லை. இருக்கிறவரை, பதவிகளை தக்கவைக்கப் போராடுவதில்தான் மாவட்ட ஆட்சியராக வரக்கூடியவர்களின் கவனமும், திட்டமும் இருக்கிறது.
குவாரிகளுக்கு அனுமதி, புல்வெளிகள், புதர்கள் அழிப்பு, மீட்டெடுக்கப்படாத நீர்நிலைகள் போன்ற ஆட்சியாளர்களின் கடமை தவறிய பணிகள் மதுரையை இந்தப் பேரழிவுக்கு கொண்டுவந்துள்ளது. எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களும், இளைஞர்களும், நிகழ்கால மக்களும், இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால் பாலைவன நகரங்களைப் போல் மதுரை மாறிவிடும்.
மதுரையில் மறைந்த புலிகள்
திருப்பரங்குன்றத்தில் புலிகள் இருந்துள்ளதாக பிரிட்டிஷாரின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகமலையில் புலிகள் இருந்துள்ளதாக நாயக்கர் கால செப்புப் பட்டயத்தில் விவரங்கள் இருந்துள்ளன.
அழகர்கோவிலில் புலிகளை வேட்டையாட அங்குள்ள ஜமீனுக்கு பிரிட்டிஷார் அதிகாரம் வழங்கியுள்ளனர். தற்போது மதுரை மாவட்டத்திலேயே புலிகள் இல்லை. அவை மதுரையில் இருந்ததாக யாரும் நம்பவும் தயாரில்லை. நரிகளும் அழிந்துவிட்டன. நரிமேடு, நரியம்பட்டி போன்ற பெயரில் கிராமங்களே மதுரையில் இருந்துள்ளன.
மின்மினி பூச்சிகளை எங்கும் நாம் பார்க்க முடிவதில்லை. புலிகள் தொடங்கி மின்மினி பூச்சிகள் வரையிலான பல்லுயிர்கள், நீர்நிலைகள், பசுமைப் பரப்புகள் அழிந்து மதுரை வெப்பத்தில் தகிக்கிறது என்கிறார் தமிழ்தாசன்.
