புற்றுநோய் வழக்குகளை முடிக்க ரூ.53,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம்!

ஜான்சன்&ஜான்சன் உள்ளிட்ட கென்வியூ இன்க் நிறுவனங்களின் குழந்தை பவுடர் உள்ளிட்ட பிற டால்க் தயாரிப்புகள் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதாக, அமெரிக்காவில் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடித்துக்கொள்ள சுமார் 5.5 மில்லியன் டாலர் (இந்தி மதிப்பில் ரூ.52,668 கோடி) செலுத்த நிறுவனம் முன்வந்துள்ளது.

தனது டால்க் அடிப்படையிலான தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தாது என்றும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பேபி பவுடரை முறையாகச் சந்தைப்படுத்தி வருவதாகவும் ஜான்சன் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதரமற்றவை என்றும், இருப்பினும் சமரசமாக செல்லவே இந்த முடிவு என்றும் தெரிவித்துள்ளது.

இதுவரை நீதிமன்றத்தில் நடந்த பெரும்பாலான வழக்குகளில் தாங்கள் வெற்றிப் பெற்றுள்ளதாகவும், மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால் இந்த வழக்கிலும் இறுதியில் வெற்றி பெற்றிருப்போம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

ஜான்சன்ஸ் பேபி பவுடரில் உள்ள டால்கம் துகள்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கலந்திருப்பதாகவும், இதனால் தங்களுக்குக் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாகவும் அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த சுமார் 76,000 வழக்குகளை இந்த ஒரே ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, முதற்கட்டமாக 2027-ஆம் ஆண்டில் சுமார் ரூ.29,000 கோடியும் ($3 பில்லியன்), எஞ்சிய தொகையை 2028-ஆம் ஆண்டிலும் வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும் இந்த இழப்பீட்டு ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர, வழக்கு தொடுத்தவர்களில் குறைந்தது 95 சதவீதத்தினர் இதற்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

டால்க் என்றால் என்ன?

டால்க் என்பது மெக்னீசியம், சிலிக்கான், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆன, இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கனிமம் ஆகும். அதன் மென்மையான, சோப்பு போன்ற தன்மைக்காக அறியப்படும் இது, நீண்ட காலமாக குழந்தைப் பவுடரில் ஒரு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டால்க் பெரும்பாலும் கல்நார் படிவுகளுக்கு அருகிலுள்ள பாறை அமைப்புகளில் காணப்படுகிறது. கல்நார் ஒரு அங்கீகரிக்கப்பட்ட புற்றுநோய்க்காரணியாகும், இது பல வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த விவாதம் காரணமாக, நிறுவனம் ஏற்கனவே 2020-ல் அமெரிக்காவிலும், பின்னர் 2023-ஆம் ஆண்டிற்குள் உலகளவிலும் டால்கம் அடிப்படையிலான பேபி பவுடர் விற்பனையை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக சோளமாவு அடிப்படையிலான பவுடர்களை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link