“ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” – ஆளுநருக்கு தவெக கண்டனம்!

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று (28.07.2026) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களும் பதக்கங்களும் வழங்கினார். இந்த விழவில், தேசிய பாடலான வந்தே மாதரம் பாடல் முதலாவதாகவும், அதனை தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகவும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எழுதிய மனோன்மனியம் சுந்தரனார் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முன்னதாக இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் மாளிகை உத்தரவிட்டிருந்ததாக அப்பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு தவெக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தவெகவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நமது மனசாட்சி உள்ள மக்களாட்சியில் யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும். எம் தாய்மொழியை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அதற்குக் காரணமாக ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி அல்லது ஆளுநராக இருந்தாலும் சரி கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்கிறோம். எங்கள் நிலத்தில் எங்கள் மொழிக்கே முன்னுரிமை. இதை உறுதியாக நாம் நிலைநாட்டுவோம். சட்ட முன்னெடுப்புத் தேவை எனில், அதற்கும் தயாராகவே இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link