பெங்களூரு: துலீப் டிராபி அரையிறுதியில் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் கைகொடுக்க, கிழக்கு மண்டல அணி பைனலுக்கு முன்னேறியது. அரையிறுதியில் மத்திய மண்டலத்தை 4 விக்கெட்டில் வென்றது.
பெங்களூருவில், துலீப் டிராபி கிரிக்கெட் அரையிறுதி நடக்கிறது. முதல் அரையிறுதியில் கிழக்கு, ‘நடப்பு சாம்பியன்’ மத்திய மண்டல அணிகள் விளையாடின. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 266 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் மத்திய மண்டல அணி, 45/3 ரன் எடுத்து, 45 ரன் முன்னிலையில் இருந்தது.
வைபவ் விளாசல்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. அமன் 41 ரன் எடுத்து அவுட்டானார். ரிங்கு சிங் 20, ஹர்ஷ் துபே 24 ரன் எடுத்தனர். பின் வரிசையில் அர்ஷத் கான் (25) சற்று கைகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் மத்திய மண்டல அணி 158 ரன்னில் ஆல் அவுட்டானது. கிழக்கு மண்டலத்தின் சார்பில் முகேஷ் குமார் 4, முகமது ஷமி 4 விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து 159 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (24), வைபவ் சூர்யவன்ஷி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. வைபவ் 43 பந்தில் 40 ரன் (2*6, 3*4) எடுத்து கைகொடுத்தார். குஷாக்ரா 22 ரன்னில் அவுட்டாக, கிழக்கு மண்டலம் 124/5 என தள்ளாடியது.
கேப்டன் இஷான் கிஷான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 162 ரன் எடுத்து வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
சங்வான் அரைசதம்
மற்றொரு அரையிறுதியில் முதல் இன்னிங்சில் வடக்கு மண்டலம் 195 ரன் எடுத்தது. தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 312 ரன் எடுத்து, 117 ரன் முன்னிலை பெற்றது. நேற்று மூன்றாவது நாளில் சனத் சங்வான் (76) கைகொடுக்க, வடக்கு மண்டல அணி 2 வது இன்னிங்சில் 256/7 ரன் எடுத்து, 139 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
சென்னையில்…
துலீப் டிராபி பைனல் சென்னையில் செப். 6-10ல் நடக்க உள்ளது. இதில் கிழக்கு மண்டல அணி, தெற்கு/வடக்கு மண்டல அணியுடன் மோதலாம்.
