புதுடில்லி: இந்திய அணியில் ‘வேகப்புயல்’ பும்ரா, ‘ஆல்-ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர் மீண்டும் இடம் பிடித்தனர்.
இந்தியா, ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் (செப். 13, 15, 17, டில்லி, அருண் ஜெட்லி மைதானம்) கொண்ட ‘டி-20’ தொடரில் மோத உள்ளன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதே அணியே ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு, கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கும்.
பாண்ட்யா ‘நோ’
காயத்தில் இருந்து மீண்ட முன்னணி வீரர்கள் வாய்ப்பு பெற்றனர். பெங்களூரு, பி.சி.சி.ஐ., உயர்திறன் மையத்தில், பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா (இடது முழங்கால் வீக்கம்), நிதிஷ் குமார் (இடது தொடை முன் பகுதியில் பிடிப்பு), தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் (வலது தொடை தசையில் காயம்), ஹர்ஷித் ராணா (வலது தொடை பிடிப்பு) தேறினர். இவர்கள், ‘உடற்தகுதியை பொறுத்து’ என்ற நிபந்தனையுடன் அணியில் சேர்க்கப்பட்டனர். இடது தொடை தசை பிடிப்பில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு, பந்துவீசும் போது காலில் வலி ஏற்பட்டதால், வாய்ப்பு பெற முடியவில்லை.
ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான அணியில் இளம் வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளனர். ஜிம்பாப்வே தொடரில் இடம் பெற்றிருந்த சூர்யான்ஷ் ஷெட்கே, ரிங்கு சிங், பிரின்ஸ் யாதவ், பிரப்சிம்ரன் சிங், மயங்க் யாதவ் உட்பட 8 பேர் நீக்கப்பட்டனர்.
இந்திய அணி: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஷிவம் துபே, நிதிஷ் குமார் ரெட்டி*, பும்ரா*, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர்*, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.
* உடற்தகுதியை பொறுத்து
‘ஆசிய’ சர்ச்சை
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடக்க இருக்கும் ஆசிய விளையாட்டில் (செப். 19-அக். 4), ‘டி-20’ கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியனாக’ இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் (ஹர்மன்பிரீத் கவுர் தலைமை) களமிறங்குகின்றன. இங்குள்ள ஏற்பாடுகள் குறித்து பி.சி.சி.ஐ., அதிருப்தி தெரிவித்தது. வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கு சிறிய அறை, ‘டென்ட்’ அமைத்து ‘டிரஸ்சிங் ரூம்’, தரமில்லாத ஆடுகளம் என எதுவும் சரியில்லை என புகார் கூறியது.
இது பற்றி ஜப்பான் கிரிக்கெட் சங்க தலைமை செயல் அதிகாரி நவோகி அலெக்ஸ் மியாஜி கூறுகையில்,”கிரிக்கெட் மைதானம் அமைக்க 17 மாத கால அவகாசம் தான் இருந்தது. இருப்பினும் சிறப்பான ஆடுகளம் அமைத்துள்ளோம். கிரிக்கெட் நட்சத்திரங்கள் தங்குவதற்கு ஓட்டலில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். மற்ற விளையாட்டு வீரர்கள் கப்பல், ‘கன்டெய்னர்’ வடிவ ஓட்டல் அறைகளில் தங்க உள்ளனர். வசதி குறைவு என கருதினால், கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் தாங்கள் விரும்பும் ஓட்டலில் சொந்த செலவில் தங்கிக் கொள்ளலாம்,”என்றார்.
