மதுரை: ‘கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒருவர், பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பை கோர முடியாது’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம், தென்கரை ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: ஹிந்து ஆதிதிராவிடர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நான், ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறேன். பள்ளியில் ஜாதி பாகுபாடு காரணமாக பள்ளி முதல்வர் என்னை தரக்குறைவாக பேசினார்.
பழிவாங்கும் நோக்கில், வேறு பள்ளிக்கு நிர்வாகம் இடமாறுதல் செய்தனர். பள்ளி தலைவர், முதல்வர், பொருளாளர் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகாரளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த வழக்கை, நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பு, ‘மனுதாரர் 2015ல் உசிலம்பட்டியிலுள்ள ஒரு சர்ச்சில் ஞானஸ்நானம் பெற்றார். பின், கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருகிறார்; அதை மறைத்துள்ளார். அவரது குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானவை’ என, தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஒருவர் வேறொரு மதத்தை பின்பற்றி, அதன்படி வாழ்ந்துகொண்டே, சட்டரீதியான சலுகைகளை பெற, பட்டியல் ஜாதி அந்தஸ்தை கோர முடியாது.
கடந்த 1950ல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி, பட்டியல் ஜாதியினர், ஹிந்து, சீக்கிய மதம் அல்லது பவுத்த மதத்திலிருந்து வேறுபட்ட மதத்தை பின்பற்றும் எந்தவொரு நபரும், பட்டியல் ஜாதியை சேர்ந்தவராக கருதப்படமாட்டார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
