நெஞ்சை நிமிர்த்தி பேச வசதியாக 'மைக்': சபாநாயகர் பிரபாகர் உத்தரவு

சென்னை: ”சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசும் வகையில், ‘மைக்’ அமைக்க வேண்டும்” என, சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இருக்கையின் முன் உள்ள மேஜையில், ‘மைக்’ மற்றும் தொடுதிரை சிறுகணினி பொருத்தப்பட்டு உள்ளன.

‘மைக் கேபிள்’ சிறியதாக இருப்பதால், முகத்துக்கு நேரே வைத்து பேச முடியாமல், சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சிரமப்படுகின்றனர்.

மனித – வனவிலங்குகள் மோதல்களை தவிர்ப்பது தொடர்பாக, தி.மு.க., — எம்.எல்.ஏ., பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார். அதற்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பதில் அளித்தார். அவரது மைக் உயரம் குறைவாக இருந்ததால், பேசுவதற்கு சிரமப்பட்டார்.

இதை கவனித்த சபாநாயகர் பிரபாகர், ”சபையின் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஓர் அறிவுறுத்தல். எம்.எல்.ஏ.,க்கள் வளைந்து, குனிந்து, மைக்கில் பேசும் நிலை இனி இருக்கக்கூடாது; அவர்கள் பேசும் போது அளவை பார்த்து, அடுத்தமுறை அதற்கேற்ப, ‘மைக்’ அமைக்க வேண்டும். ”எம்.எல்.ஏ.,க்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசுவதற்கு வசதி செய்து தர வேண்டும்,” என்றார்.

இவ்வாறு சபாநாயகர் கூறியதும், ஆளும்கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களும், மேஜையை தட்டி வரவேற்றனர்.

Source link