வாஷிங்டன்: ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால் கடுமையாக தாக்குவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் ஆறு மாதங்களாக நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாத இறுதியில் இருந்து இரு தரப்பும் எவ்வித தாக்குதலும் நடத்தாமல் இருந்தன. சில தினங்களுக்கு முன், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானின் லராக் தீவில் இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்காசிய நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
தற்போது ஈரானில் பல்வேறு இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க மத்தியப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 1ம் தேதி ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்க படைகள் வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்தின.
ஈரானின் வான் பாதுகாப்புத் தளங்கள், ரேடார் அமைப்புகள், கடல்சார் தளவாடங்கள் மற்றும் கண்ணிவெடி அமைக்கும் திறன் கொண்டவை மற்றும் தகவல் தொடர்பு நிலையங்கள் உள்ளிட்டவை மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீதும், அமெரிக்க ராணுவத்தினர் மீதும் ஈரான் சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்தே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மத்திய கிழக்கு முழுவதும் 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்; அவர்கள் விழிப்புடனும், தலைமைத் தளபதி உத்தரவிடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தத் தயாராகவும் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடுமையாக தாக்குவோம்
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகிலுள்ள ஈரான் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்தவையாக உள்ளன. தற்போது கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடிக்கச் செய்யப்பட்டுவிட்டன. அந்த ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் பொருத்த ஈரான் முயற்சி மேற்கொண்டது. ஜோர்டானில் உள்ள நமது ராணுவத் தளம் மீது ஈரான் ஏவிய எட்டு ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாங்கள் பதில் தாக்குதல்கள் நடத்தியுள்ளோம். முற்றிலும் தோல்வியடைந்த நாடான ஈரான், நியாயமான இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க முயன்றால், அவர்கள் இன்னும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாவார்கள்; ஆனால் அதுவே மிகப்பரிய தாக்குதலாக இருக்காது; அதற்கும் மேலான ஒரு தாக்குதல் காத்திருக்கிறது; அது நிகழ்ந்து முடிந்த பிறகு, ஈரான் என்ற நாடே சிறிய அளவிலேயே எஞ்சியிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
