200 மதுபாட்டில்களுடன் இளம்பெண்; பார் ஊழியர்களின் ஆத்திரம்

தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரின் பிங்க்லாவ் பகுதியில் பிரபல பார் ஒன்று இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 25 அன்று அந்த மது பானக்கடைக்கு (பார்) 18 வயதான இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அந்த பாரில் நுழைவதற்காகத் தனது வயதை மறைக்கப் போலியான அடையாள அட்டையை அவர் பயன்படுத்தியுள்ளார். இந்த பாரில் நுழைவதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

இந்நிலையில், பாரின் உள்ளே சென்ற அவர் அங்கிருந்த ஊழியர்களிடம் அடுத்தடுத்து சுமார் 200 மதுபானங்களை ஆர்டர் செய்துள்ளார். இதற்கான பில் தொகை 60 ஆயிரம் தாய் பாட் (ரூ.1.5) ஆகியுள்ளது. இருப்பினும், இந்த பில் தொகையைக் கட்ட தன்னிடம் பணம் இல்லை என்று கூறி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.    

அப்போது அவரை மடக்கிப் பிடித்த ஊழியர்கள், அந்த பணத்தைப் பெற அவரது குடும்பத்தாரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். அது முடியாமல் போனதையடுத்து, ஆத்திரமடைந்த பாரின் மேலாளர் அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினார்.  

அந்த ஒப்பந்தத்தின் படி, அவரது முடியை 3 ஆயிரம் பாட் பணத்திற்கு வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த பாரின் ஊழியர்கள் இயந்திரத்தின் மூலமாக அந்த பெண்ணின் முடியை மழித்து, அவருக்கு மொட்டையடித்துள்ளனர்.  

இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண் தனது தாயாருடன் சென்று பாங் யி கான் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பார் ஊழியர்கள் தன்னை மிரட்டிக் கட்டாயப்படுத்தி தலையை மொட்டையடித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பேசுபொருளாக  மாறியுள்ள நிலையில், பார் நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. இருப்பினும், இளம்பெண்ணை அவமானப்படுத்திய குற்றத்திற்காக மேலாளரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Source link