சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிடவும், 2012 ஆம் ஆண்டு முதல் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பண பயன்களை வழங்க வேண்டும், 15 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
அதன்படி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் மற்றும் பதிவாளர் அலுவலகத்தை காலை முதல் மாலை வரை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் 10-வது நாள் போராட்டமான இன்று (02-09-26) பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திற்கு முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணியை புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பல்கலைக்கழக பதிவாளர் பல்வேறு முறைகளில் ஈடுபட்டவரை மீண்டும் பதிவாளராக பணி அமர்த்தி, ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரையும் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அரசு, நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அண்ணாமலை நகர் மற்றும் சிதம்பரம் பகுதியில் பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டமும் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
