தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பெருந்தன்மையை சபாநாயகர் அப்பாவு பாராட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இன்றைய நிகழ்வில் சட்டமன்ற விதி 110-இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட சில அறிவிப்புகள் தொடர்பான விவாதத்தின் போது இந்த சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியுள்ளது. விவாதத்தின் போது, “முன்னாள் முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் சில குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிடவில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால், சபாநாயகர் முந்தைய அவைக்குறிப்பு ஆதாரங்களை எடுத்துக்காட்டி, “முன்னாள் முதலமைச்சரும் 110-வது விதியின் கீழ்தான் அந்த அறிவிப்புகளை வெளியிட்டார்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
சபாநாயகர் காட்டிய தகுந்த ஆதாரங்களை உடனே ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தாங்கள் காட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் நான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன், அதனை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கிக் கொள்ளலாம்” என்று உடனடியாக அறிவித்தார்.
சபாநாயகர் ஆதாரத்தைச் சுட்டிக்காட்டிய அடுத்த கணமே, தன் தவறை உணர்ந்து ஈகோ பார்க்காமல் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற்ற உதயநிதி ஸ்டாலினின் இந்த உயரிய பண்பையும், பெருந்தன்மையையும் சபாநாயகர் அவையிலேயே வெகுவாகப் பாராட்டினார்.
