ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மர்ம நபர்கள்; 2 லோடு பீர் பாட்டில்கள் மாயம்

அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள பிரபல பீர் நிறுவனமான ’பாப்ஸ்ட் புளூ ரிப்பன்’  நிறுவனத்திற்குச் சொந்தமான மதுபான சரக்குகள் காணாமல் போயுள்ளது உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.   

கலிபோர்னியாவின் மாண்ட்லெயார் பகுதியில் ’அன்ஹியூசர்-புஷ்’ என்ற மதுபான விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17 அன்று அந்த மதுபான விற்பனையகத்தில் சில நபர்கள் பீர் லோடை ஏற்றிச்செல்ல வந்த ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் போல நடித்து போலி ஆவணங்களை சமர்ப்பித்தனர்.  

இதையடுத்து, சுமார் 40  ஆயிரம் டாலர் மதிப்புள்ள பீர் லோடை, அந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து, மதியம் ஒரு மணி அளவில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான டாலர் மதிப்புள்ள சுமார் 33,984 பீர் கேன்கள் (1500 கேஸ்கள்), அதே போன்ற போலி ஆவணத்துடன் கடத்தப்பட்டன. திருடப்பட்ட மொத்த மதுபானத்தின் மதிப்பு கிட்டதட்ட 70 ஆயிரம் டாலர் (தோராயமாக ரூ.58 லட்சம்) இருக்கும் என்று கூறப்படுகிறது.  

இந்த திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பீர் தயாரிப்பு நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த திருட்டு சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளது. மேலும், அந்த பீர் பாட்டில்களைத் திருப்பி அளிக்க நிபந்தனை விதித்துள்ளது. இது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், திருடிய பீரை எவ்வித கேள்விகளும் இல்லாமல் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்கு 18 நாட்கள் மற்றும் 44 நிமிடங்கள் காலக்கெடு விதித்தும், கவுண்டவுன் கடிகாரத்தையும் பதிவிட்டுள்ளனர். இதனிடையே, இந்த திருடப்பட்ட மதுபானத்தைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்குத் தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  

இது அந்த நிறுவனத்தின் விளம்பர உத்தியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், காவல்துறையினரும் திருட்டு சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், மதுபான கூடத்திலிருந்து மர்ம நபர்களின் கைவரிசையால் 2 லோடு சரக்குகள் மாயமானது குறித்து, பலரும் கிண்டலான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.   

Source link