சமூக ஊடகங்களில் ஏராளமானோர் ரீல்ஸ் வீடியோக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வித்தியாசமான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இந்த பதிவுகளை மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள், பல்வேறு வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது பதிவுகளுக்கு லைக் போட்டு 30 பேருக்குப் பகிர்ந்தால், அவர்களுக்கு 30 திருப்பதி லட்டுகள் இலவசமாக வழங்கப்படும் என்று பதிவிட்டிருந்தார். அதோடு, தனது பதிவுகளை எந்த அளவிற்கு அதிகமாகப் பகிர்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுக்கு லட்டுகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, அவர் பதிவிட்டிருந்த மற்றொரு வீடியோவில், ”ஒருவர் இவரது சேனலை சப்ஸ்கிரைப் செய்ததோடு மட்டுமல்லாமல், மேலும் 30 பேரை சப்ஸ்கிரைப் செய்ய வைத்ததாகவும், அதற்காக அவரிடம் இருந்து 30 லட்டுகளைப் பரிசாகப் பெற்றதாகவும் தெரிவிக்கிறார்”. இந்த வீடியோவும் வைரலானது பெற்றிருந்தது.
சமூக ஊடகங்களில் இந்த பதிவுகள் வைரலான நிலையில், இது குறித்து திருப்பதி தேவஸ்தானத்திற்குப் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டைத் தனி நபர்கள் தங்களின் சுய லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருப்பதி தேவஸ்தானம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய திருப்பதி தேவஸ்தான தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி, ”அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள லட்டு உண்மை தானா? என்பது இதுவரை உறுதிப் படுத்தப்படவில்லை. இருப்பினும், கோயில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படும் லட்டை, தனி நபர்கள் தங்களின் தனிப்பட்ட நோக்கத்திற்காகத் தவறான முறையில் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அந்த பதிவு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
