பிரபல நடிகரின் மகன் மீது வழக்கு!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக அறியப்படுபவர் துனியா விஜய். தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இவரது மகன் சாம்ராட் விஜய்(21) பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர்  பெங்களூரு மைசூரு சாலையில் தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது சாம்ராட் விஜய் படிக்கும் கல்லூரியை சேர்ந்த மனிஷ் கௌடா என்பவர் அவரது நண்பர்களுடன் காரில் வந்த போது சாம்ராட் விஜய்யின் காரை முந்தி சென்றுள்ளார். இதனால் பகை உண்டானதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து மைசூரு சாலையில் உள்ள ஆர்.வி. பல்கலைக்கழகத்திற்கு வெளியே மனிஷ் கௌடா நின்றுகொண்டிருந்தபோது, ​​சாம்ராட் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் அவரை வழிமறித்து, காரில் வலுக்கட்டாயமாக ஏற்றித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த மனிஷ் கௌடா தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தாக்குதல் சம்பந்தமாக கெங்கேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ச்சம்ராட் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது கடத்தல் தொடர்பான பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source link