விஜய் பேசுவது போல் பாகிஸ்தானில் இருந்து போலி ஏ.ஐ வீடியோ: தமிழக சைபர் கிரைம் எச்சரிக்கை

தமிழக முதல்வர் விஜய் பேசுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவதைத் தமிழக சைபர் கிரைம் சிஐடி கண்டறிந்துள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் இந்த வீடியோக்கள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் யாரும் அதில் உள்ள தொலைபேசி அல்லது வாட்ஸ்அப் எண்களைத் தொடர்பு கொள்ளவோ, பணத்தை அனுப்பவோ வேண்டாம் என தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

2026 தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வர் விஜய் மீதான தேசிய அளவிலான கவனம் அதிகரித்துள்ள நிலையில், அவரது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி இணையவழி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக சைபர் கிரைம் சிஐடி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தமிழக முதல்வர் விஜய்யைப் போல ஆள்மாறாட்டம் செய்து, இந்தி ஆடியோவுடன் கூடிய ஏஐ டீப்ஃபேக் வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பாவிப் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்யும் தீய நோக்கத்துடன் மட்டுமே இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், முதல்வர் விஜய்யைப் போன்று உருவாக்கப்பட்ட இந்த போலி வீடியோக்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவை எனக் கூறப்படும் சில ஃபேஸ்புக் கணக்குகள் மூலம் பகிரப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த வீடியோக்களை உருவாக்கிப் பரப்பிய நபர்களை அடையாளம் காணும் பணிகளில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே முதல்வர் விஜய் பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் மாணவர்களுக்குக் கல்விக் கடனும், ஏழை எளிய மக்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுவதாகவும் கூறி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அதுதொடர்பாக தமிழக காவல்துறையின் இணையக் குற்றப்பிரிவுடன் இணைந்து ஏற்கனவே தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏஐ டீப்ஃபேக் வீடியோக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் அல்லது வாட்ஸ்அப் எண்களை பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தொடர்புகொள்ளக் கூடாது. உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் இத்தகைய வீடியோக்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்பக் கூடாது. இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் இந்த போலி வீடியோக்களின் உள்ளடக்கங்களை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும், இந்த வீடியோக்களை உருவாக்கிப் பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சைபர் கிரைம் சிஐடி தெரிவித்துள்ளது.

Source link