இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது ‘மஞ்சணத்தி’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் நடிக்கின்றனர். இப்படத்தை மாரி செல்வராஜின் மனைவி திவ்யா மாரி செல்வராஜ் ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ சார்பில் தயாரிக்கிறார். அவரோடு இணைந்து ஃபார்சியூன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது.
இந்த நிலையில் ‘நவ்வி ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ‘மாகாளி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பபடத் அயங்கரன் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறது. இதில் அமீர் நாயகனாக நடிக்கிறார். மேலும் ஸ்வாசிகா, அனிஷ்மா அனில் குமார், லெனின் பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் அரவிந்த் என்பவர் இயக்குகிறார். இவர் மாரி செல்வராஜின் உதவி இயக்குநர். பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமீர் மொட்டைத் தலை கெட்டப்புடன் கைலி மற்றும் சட்டை அணிந்து கொண்டு எலும்பு கூட்டின் மேல் நடந்து வருவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜின் பைசன் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
