தேவ்தத் படிக்கல் முன்னேற்றம்: ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல் 54வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டர்’ தரவரிசையில் இந்தியாவின் தேவ்தத் படிக்கல், 538 புள்ளிகளுடன் 59வது இடத்தில் இருந்து 54வது இடத்தை கைப்பற்றினார். சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் அசத்திய தேவ்தத் படிக்கல், 2 சதம் உட்பட 328 ரன் குவித்து, தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இலங்கை தொடரில் பெரிய அளவில் சோபிக்காத இந்திய கேப்டன் சுப்மன் கில் (709 புள்ளி) 7வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய வீரர்களான ரிஷாப் பன்ட் (713), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (697) முறையே 7, 11வது இடத்தில் நீடிக்கின்றனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில், இலங்கை தொடரில் பங்கேற்காத இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (853 புள்ளி) 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் மாட் ஹென்றி (861) 2வது இடத்துக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (872) ‘நம்பர்-1’ இடத்தில் தொடர்கிறார்.

Source link