புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் புள்ளான்விடுதி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து டாஸ்மாக் கடைகள் இல்லாத அணவயல், மாங்காடு, நெடுவாசல், வடகாடு உள்பட பல கிராமங்களுக்கு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கிச் சென்று அதிக விலைக்கு விற்று வருவதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த வாரம் நெடுவாசல் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஒருவரை 50 மதுப்பாட்டில்களுடன்போலீசார் பிடித்தனர். அதேபோல இன்று புள்ளான்விடுதி டாஸ்மாக் கடைக்குச் செல்லும் சாலையில் போலீசார் மறைவாக நின்ற போது ஒரு மோட்டார் சைக்கிளில் மதுப்பாட்டில்கள் வாங்கி வருவதைப் பார்த்த போலீசார் அவரைப் பிடித்து விசாரணை செய்த போது, மதுப்பாட்டில்கள் கொண்டு சென்றவர் மறமடக்கி கிராமம் செவிடன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த, த.வெ.க அறந்தாங்கி ஒன்றிய குழு நிர்வாகி பாவேந்தனின் தந்தை சக்திவேல்(62) என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்த 60 மதுப்பாட்டில்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார் வடகாடு காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக நிர்வாகியின தந்தை மது பாட்டில்களுடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
