சென்னை:தி.மு.க., ஆட்சியின்போது, விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் விஜய் அறிவித்தார். சட்டசபையில், தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு:
சட்டத்திற்குட்பட்டு, தங்கள் கோரிக்கைகளை, மக்கள் முன்வைப்பதற்கான சூழலை, அரசு உறுதிப்படுத்தி வருகிறது.
முந்தைய ஆட்சியில், தங்களது வாழ்வாதாரம், உரிமைகள், சமூக நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய, விவசாயிகள், ஆசிரியர்கள் மீது, 2021 முதல் 2026 ஏப்ரல் வரை, ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஜனநாயக முறையில் குரல் கொடுத்த மக்களுக்கு, அனுமதி மறுக்கப்பட்டதோடு, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திருவண்ணாமலையில், ‘சிப்காட்’ தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது, குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது.
பரந்துாரில் புதிய விமான நிலைய திட்டத்தைக் கைவிடக் கோரி போராடிய விவசாயிகள் மீதும், முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆசிரியர்கள், தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக, ஜனநாயக முறையில் போராடியபோது, அவர்கள் மீதும் பதிவான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, ஜனநாயக உரிமைகளை மதிக்கும் இந்த அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., – வேலு: முதல்வர் விஜய், ‘முந்தைய ஆட்சியில் போராடியோர் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்’ என அறிவித்ததில், எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால், சிப்காட் மற்றும் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் நடக்கும்போது, சட்டம் – – ஒழுங்கை பாதுகாக்க, காவல் துறையை பயன்படுத்தி வழக்கு பதியப்படுகிறது. த.வெ.க., ஆட்சியில், காவல் துறையை வைத்து வழக்கே பதிய மாட்டீர்களா?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீதான வழக்குகளை, உச்ச நீதி மன்றம் ரத்து செய்து உள்ளது.
அரசு சொல்லும்போது, வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்யும். விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முதல்வரை சந்தித்து வைத்த கோரிக்கை அடிப்படையில், வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அமைச்சர் நிர்மல்குமார்: போராட்டங்களை ஒடுக்கவே, முந்தைய ஆட்சியில் வழக்குகள் போடப்பட்டன. அரசு தலைமை வழக்கறிஞர் வாயிலாக, போராட்ட வழக்குகளை திரும்பப் பெற நட வடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி: முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது, இது முதல் முறை அல்ல.
குடியுரிமை சட்டம், சென்னை — சேலம் எட்டு வழிச்சாலை, வேளாண் சட்டங்கள், கூடங்குளம் அணு உலை ஆகியவற்றுக்கு எதிராக போராடியோர் மீது போடப்பட்ட, 5,000க்கும் அதிகமான வழக்குகளை, தி.மு.க., அரசு திரும்ப பெற்றது.
தி.மு.க., – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: த.வெ.க., ஆட்சியின் 100 நாட்களில், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளன. அந்த வழக்குகளும் திரும்பப் பெறப்படுமா?
இவ்வாறு விவாதம் நடந்தது.
