ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், கனடாவின் விக்டர் லாய் மோதினர். இதில் லக்சயா சென் 14-21, 7-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனதைபேயின் சி யு ஜென் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா, டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸ் மோதினர். இதில் தான்வி 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக் 18-21, 15-21 என பல்கேரியாவின் கலோயானா நல்பான்டோவாவிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-11, 21-16 என, மலேசியாவின் ஜுனைடி ஆரிப், காங் காய் ஜிங் ஜோடியை வென்றது.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-8, 21-9 என தாய்லாந்தின் டான்கிட், டான்ரக் சேஹெங் ஜோடியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரோஹன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி 16-21, 18-21 என சீனதைபேயின் குவான் ஜுன் வு, சியா ஹசின் லீ ஜோடியிடம் தோல்வியடைந்தது.
